உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்றவே தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவளிக்கிறோம் சிவகங்கையில் தினகரன் பேட்டி

தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்றவே தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவளிக்கிறோம் சிவகங்கையில் தினகரன் பேட்டி

சிவகங்கை : ''தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும்,'' என, சிவகங்கையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அ.ம.மு.க.,) பொது செயலாளர் தினகரன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: 2024 ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தோம். பிரதமராக மீண்டும் 3 வது முறையாக மோடி வந்தால் தான் நாட்டிற்கு நன்மை என்ற எண்ணத்தில் நிபந்தனையின்றி ஆதரவு தெரிவித்தோம். ஜெயலலிதா தொண்டர்கள் ஒரே குடையின் கீழ் இருந்தால் தான் தி.மு.க.,வை வீழ்த்த முடியும். மத்திய அமைச்சர் அமித்ஷா 2024ல் அமைத்த கூட்டணியை வலுப்படுத்தி வருகிறார். பிரதமர் மோடி தமிழக வருகைக்கு பின்னரே தமிழக அரசியலில் எந்தவித மாற்றம் ஏற்படும் என்பது தெரியும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இம்மாவட்டத்தில் மடப்புரத்தில் காவலாளி அஜித்குமாரை போலீசார் தாக்கி கொலை செய்துள்ளனர். கஞ்சா, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. கொலை, கொள்ளையை போலீசார் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கின்றனர். தி.மு.க., ஆட்சியில் போலீஸ் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்றனர். ஆனால், மக்களிடம் கடும் விமர்சனம் எழுந்ததால், எம்.பி., தேர்தலின்போது தகுதி உள்ள மகளிருக்கு மட்டுமே எனக்கூறி உதவித்தொகை வழங்கினர். 2026 சட்டசபை தேர்தல் வருவதால், அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்கப்படும் எனக்கூறி மனுக்களை பெற்று வருகின்றனர். அப்படியானால் கடந்த 2 ஆண்டிற்குரிய நிலுவை தொகையையும் சேர்த்து தருவார்களா என பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேட்டதை தான் நானும் கேட்கிறேன். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே சட்டசபை தேர்தலில் மக்களை சந்திக்க முடியும் என கம்யூ., தலைவர் சண்முகம் தெரிவித்தார். அந்தளவிற்கு இந்த ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்றார். மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை