பராமரிப்பில்லாத குடியிருப்பு இடித்து அகற்றுவது எப்போது
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் ஆரம்பித்த போது அதே வளாகத்தில் அரசு ஊழியர்களுக்காக வீட்டு வசதி வாரியம் மூலமாக அடுக்கு மாடி வீடுகள், ஏ, பி, சி, டி, இ என தனித்தனியாக 1984ல் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகள் வீட்டு வசதி வாரியத்தின் முறையான பராமரிப்பு இல்லாததால் கட்டுமானம் காலாவதியாகி உடைந்து விழுந்து வருகிறது. வேறு வழியின்றி அரசு ஊழியர்கள் அந்த வீடுகளில் பயத்துடன் இன்றும் குடியிருந்து வருகின்றனர்.சேதமடைந்த சில வீடுகளை மட்டும் இடித்து அப்புறப்படுத்தியுள்ளனர். சில வீடுகள் முழுவதும் சேதம் அடைந்த நிலையில் அப்புறப்படுத்தாமல் உள்ளது. இந்த வீடுகளில் சில சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மாவட்ட நிர்வாகம் முழுவதும் சேதம் அடைந்துள்ள வீடுகளை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருந்து வரும் அரசு ஊழியர்களுக்கு மாற்றாக குடியிருப்பு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.