| ADDED : ஜூலை 26, 2024 01:07 AM
காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரத்தில் வீட்டிற்கு வழி விடாததாக கூறி சகோதரர் வீட்டின் முன் பக்க கேட்டை பெண் துணை கலெக்டர் பூட்டினார்.சூடாமணிபுரம் நேதாஜிசாலையைச் சேர்ந்த கண்மணி 51, திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு ஆயத்தீர்வை துணை கலெக்டராக உள்ளார். இவர் தாயார் மணிமேகலையுடன் காரைக்குடியில் வசித்து வந்தார். மணிமேகலை சில நாட்களுக்கு முன் இறந்தார். இதற்காக கண்மணி சகோதரர் ராஜா 47, சென்னையில் இருந்து வந்திருந்தார்.காரைக்குடியில் உள்ள வீடு தொடர்பாக கண்மணிக்கும் ராஜாவிற்கும் பிரச்னை இருந்தது. இதுகுறித்து காரைக்குடி போலீசில் இருவரும் பரஸ்பரம் தனியாக புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து வந்த நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள மற்றொரு வீட்டிற்கு வழிவிடாத ஆத்திரத்தில் நேற்று துணை கலெக்டர் கண்மணி முன்பக்க இரு கேட்களையும் பூட்டினார். இதுகுறித்து ராஜா போலீசாரிடம் புகார் அளித்தார். தாசில்தார், போலீசார் நீண்ட நேரம் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலையில் தானாகவே முன்வந்து கண்மணி கேட்டை திறந்து விட்டார்.துணை கலெக்டர் கண்மணி கூறியதாவது: பின்னால் உள்ள வீட்டை தாயார் என் பெயருக்கு எழுதி உள்ளார். தாயாருக்கு உடல்நலம் சரியில்லாததால் நான்தான் பார்த்தேன். பின்னால் உள்ள ஓட்டு வீட்டில் மழை நீர் வழிந்ததால் முன்பக்க வீட்டில் பொருட்களை வைத்துக்கொண்டு அங்கு இருந்தோம். தாயார் இறப்பிற்கு பின் என் வீட்டிற்குள் செல்ல பாதை தரவில்லை. இத்துடன் முன் பக்க வீட்டில் வைத்திருந்த என் நகைகள், பொருட்களை காணவில்லை. மேலும் என் துணிமணிகளை சகோதரர் குடும்பத்தினர் வெளியே வீசியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும் நடவடிக்கையும் இல்லை. மாற்றுத் துணி கூட இல்லாமல் தவிக்கிறேன். எனக்கு நியாயம் கிடைக்க கேட்டை பூட்டினேன் என்றார்.ராஜா கூறியதாவது: எனது வீட்டின் வழியே வர சகோதரிக்கு உரிமை இல்லை. நான் சென்னையில் வசித்து வருகிறேன். தாயார் இறப்புக்காக வந்தேன். வீட்டுக்கு வந்து பார்க்கும் போது எனக்கு சொந்தமான பொருட்கள், ஆவணங்களை காணவில்லை. இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன். கேட்டை பூட்டியதால் மனைவி, குழந்தைகள் வெளியே செல்ல முடியவில்லை என்றார்.தாசில்தார் ராஜா கூறுகையில், ''வீட்டின் கேட்டை பூட்டியதாக ராஜா புகார் அளித்தார். அதன் பேரில் துணை கலெக்டரிடம் பேசினோம். அதனைத்தொடர்ந்து அவரே கேட்டை திறந்து விட்டார் என்றார்.