நண்பர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள்
சிவகங்கை: சிவகங்கையில் நண்பரை கழுத்தறுத்து கொலை செய்த கட்டட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார். சிவகங்கை காமராஜர் சாலையை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 27. இளையான்குடி அருகே புளியங்குளத்தை சேர்ந்த அழகர்சாமி மகன் பூமிநாதன் 44. இருவரும் கட்டட தொழில் செய்து வந்தனர். வேலை இல்லாத நாட்களில் சிவகங்கை, மானாமதுரையில் நுங்கு வியாபாரம் செய்தனர். நுங்கு விற்பனை பங்கு பணம் ரூ.1,500ஐ முத்துப்பாண்டி தரவில்லை. இந்த பணத்தில் முத்துப்பாண்டி மது அருந்தியதால் இருவருக்கும் பிரச்னை இருந்தது. 2018 ஏப்.28 ல் முத்துப்பாண்டி சிவகங்கை வாரச்சந்தை ரோட்டில் சென்றார். இதை அறிந்த பூமிநாதன் அங்கு சென்று அவரிடம் பணத்தை கேட்டுள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் பூமிநாதன் மறைத்து வைத்திருந்த நுங்கு வெட்டும் அரிவாளால் முத்துபாண்டி கழுத்தை அறுத்து கொலை செய்தார்.போலீசார் பூமிநாதனை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. பூமிநாதனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2000 அபராதமும் விதித்து நீதிபதி அறிவொளி உத்தரவிட்டார்.