அரசு பஸ் டயர் வெடித்து தொழிலாளி கால்கள் முறிவு
திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று இரவு அரசு டவுன் பஸ்சின் பின்பக்க டயர் வெடித்ததில் கூலி தொழிலாளியின் இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டது. மானாமதுரையில் இருந்து திருப்புவனத்திற்கு தினசரி நான்கு முறை டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று மாலை திருப்புவனம் வந்த டிஎன் 63 என் 1591 என்ற சிவகங்கை கிளை பணிமனையைச் சேர்ந்த டவுன் பஸ்சை ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த செல்வம் 43 ஓட்டி வந்தார். இளையான்குடியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் 29, கண்டக்டராக இருந்தார். மாலை 6:30 மணிக்கு திருப்புவனத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் புறப்பட்டது. டிரைவர் சீட் வரிசையில் பின்டயரின் மேல்பகுதியில் உள்ள இருக்கையில் தூதையைச் சேர்ந்த மலைச்சாமி 55, அமர்ந்து பயணம் செய்துள்ளார். லாடனேந்தல் தனியார் பள்ளி அருகே செல்லும் போது பின்பக்க டயர் வெடித்து மலைச்சாமி பஸ்சின் உட்புறப்பகுதி மரப்பலகை உடைந்து மலைச்சாமியின் இரண்டு கால்களும் சிக்கி கொண்டன. மலைச்சாமியை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மலைச்சாமி மகள் சூர்யா கூறுகையில், எனது தந்தை திருப்புவனத்தில் உள்ள செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக பணியாற்றுகிறார். நேற்று வேலை முடிந்து பஸ்சில் வரும் போது இவ்வாறு நடந்துள்ளது என்றார்.