| ADDED : நவ 19, 2025 07:14 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே சாலுாரில் தை பொங்கல் விற்பனைக்காக மஞ்சள் கிழங்கு விளைந்துள்ளது. மாவட்டத்தில் கிணற்று பாசனம் மூலம் காய்கறிகள், கீரை அதிகளவில் விளைவிக்கப்படும் பகுதி சிவகங்கை அருகே சாலுார் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் தான். இங்கு காய்கறிகள் மட்டுமின்றி நெல், கரும்பு, கடலை, வாழை உள்ளிட்டவைகளை நடவு செய்து வருகின்றனர். தை பொங்கலுக்கு தேவையான மஞ்சள் கிழங்கை விளைவிக்க சாலுார், கீழசாலுார், கொளிஞ்சிபட்டி, பெருமாள்பட்டி உட்பட 7 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பகுதியில் 25 ஏக்கரில் மஞ்சள் கிழங்கு நட்டு, தை பொங்கலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் அறுவடைக்கு தயாராகி வருகின்றன. மஞ்சள் ரூ.70க்கு விற்றால் லாபம் சாலுார் விவசாயி பி.ஆனந்தம் கூறியதாவது, மஞ்சள் கிழங்கை நடவு செய்து, தொடர்ந்து 6 மாதத்திற்கு நன்கு பராமரிக்க வேண்டும். பூச்சி தாக்காத வண்ணம் மருந்து அடித்தும், களையெடுத்தும் பராமரித்து வர வேண்டும். 3 அடி முதல் 4 அடி உயரத்திற்கு மஞ்சள் கிழங்கு வளர்ந்ததும், பொங்கலுக்காக அறுவடை செய்வோம். ஒரு ஜோடி மஞ்சள் கிழங்கு ரூ.70 முதல் 80 வரை விற்றால் தான் விவசாயிகளுக்கு ஓரளவிற்கு லாபம் கிடைக்கும் என்றார்.