கடன் பிரச்னையில் வீட்டை பறிக்க முயற்சி: பெண் தற்கொலை
தென்காசி:கடன் வாங்கி கட்டிய வீட்டை தங்களுக்கு எழுதி தரச் சொல்லி கடன் கொடுத்தவர் கட்டாயப்படுத்தியதால் பெண் மனம் உடைந்து பாறையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி, வளையர்குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ணன் 50. இவரது மனைவி லட்சுமி 45. மூன்று மகன்கள் உள்ளனர். லட்சுமி அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் வீடு கட்டுவதற்கு ரூ.6 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடனை முழுமையாக அடைக்க முடியவில்லை. எனவே கிருஷ்ணனும் மனைவி லட்சுமியும் கேரளாவுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டனர். கடன் கொடுத்த நபர் ரூ.12 லட்சம் மதிப்புள்ள அந்த வீட்டை தமது பெயருக்கு பதிவு செய்து தரும்படி கேட்டுள்ளார். கேரளா சென்று இருவரையும் அழைத்து வந்து நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த லட்சுமி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினார். சேம்புத்துநாதர் கோயில் செல்லும் வழியில் உள்ள உயரமான பாறையில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். சொக்கம்பட்டி போலீசார் லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு தூண்டியதாக கடன் கொடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.