தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களான, தஞ்சாவூரில், 2.96 லட்சம் ஏக்கர், திருவாரூரில், 3.62 லட்சம், நாகையில், 1.52 லட்சம், மயிலாடுதுறையில் 1.85 லட்சம் ஏக்கர் என, மொத்தம் 10 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.இதில், 50 சதவீத பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. போதிய தண்ணீர் இல்லாததாலும், தொடர்ச்சியாக மழை பெய்யாமல், பயிர் பூ பிடிக்கும் தருணத்தில், மழை பெய்ததால் நெற்பயிர்கள் வீணாகின.ஒரிரு நாட்கள் பெய்த மழையும், வடிகால் வசதியின்றி வயலில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் சம்பா, தாளடி சாகுபடியை மேற்கொண்ட நிலையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் புகையான், குருத்துப்பூச்சி தாக்குதலால் நெல் மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.சராசரியாக ஏக்கருக்கு, 1,400 - 1,600 கிலோ வரை மகசூல் கிடைக்காமல், 1,000 - 1,300 கிலோ வரை மட்டுமே மகசூலாகியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.அதேசமயம், மகசூல் பாதிப்பால், நெல் உற்பத்தி குறைந்ததால் ஆந்திரா, கர்நாடக, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து நெல்லை வாங்கி வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். இதனால், தமிழகத்தில் அரிசி கிலோ, 12 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.இது குறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலர் சுந்தர விமல்நாதன் கூறியதாவது:டெல்டா மாவட்டத்தில் போதிய மழையின்மை, பற்றாக்குறையான தண்ணீர், பூச்சித்தாக்குதலால் நெல் மகசூல் 20 - 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. மகசூல் குறைந்துள்ளதால், தனியார் வியாபாரிகள் களத்து மேட்டுக்கே சென்று நெல்லை கொள்முதல் செய்கின்றனர்.வியாபாரிகளால் 62 கிலோ கொண்ட ஒரு மூட்டை, 1,650 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர். விவசாயிகளுக்கு உரிய பயிர் இன்சூரன்ஸ் கிடைக்க, அரசு முறையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இது குறித்து வேளாண் அலுவலர்கள் எவ்வித தவறான தகவல்களையும் அரசுக்கு கொடுக்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
6,000 கன அடி தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி.,ஆகும். அணை நீர்மட்டம் நேற்று 70.42 அடி, நீர்இருப்பு 33.06 டி.எம்.சி.,யாக இருந்தது. டெல்டாவில் நாகை மாவட்டத்தில், 18,059 ஏக்கர், திருவாரூரில், 4,715 ஏக்கர் என, மொத்தம் 22,774 ஏக்கரில் சாகுபடி செய்த சம்பா பயிர் வறட்சியால் கருக துவங்கியது.அதற்கு நீர் திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். பயிர்கள் கருகாமல் தடுக்க மேட்டூர் அணையில் இருந்து, 2 டி.எம்.சி., நீரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. நேற்று மாலை, 6:00 மணிக்கு மேட்டூர் அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையங்களில் வழியாக பாசனத்துக்கு வினாடிக்கு, 6,000 கனஅடி, குடிநீருக்கு, 600 கன அடி என மொத்தம், 6,600 கன அடி நீர் திறக்கப்பட்டது.