ஆசிரியர் பெயரை எழுதி வைத்து முன்னாள் மாணவன் தற்கொலை
தஞ்சாவூர்: ஆசிரியர் பெயரை சுவற்றில் எழுதி வைத்து, முன்னாள் மாணவன் பள்ளி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே சின்னமனையை சேர்ந்தவர் விஷ்ணு, 20; மதுரை அண்ணா பல்கலையில், கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்தார். இவர் தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு வெளியில் சென்ற விஷ்ணு வீடு திரும்பவில்லை. நேற்று காலை, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விஷ்ணு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சேதுபாவாசத்திரம் போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில், விஷ்ணு பள்ளிச்சுவரில், 'என் சாவுக்கு காரணம் பாபு' என எழுதி வைத்திருந்தார். தொடர் விசாரணையில், பாபு அப்பள்ளி ஆங்கில ஆசிரியர் என்பது தெரியவந்தது. பாபுவிடம் விசாரணை நடத்தியதில், விஷ்ணு பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதும், மூன்று மாதங்களாக பாபுவுக்கு, விஷ்ணு, பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன், விஷ்ணுவின் செயல்பாடுகள் குறித்து, அவரது குடும்பத்தினரிடம் பாபு கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த விஷ்ணுவின் பெற்றோர், அவரை கண்டித்தனர். இதில், மனமுடைந்த விஷ்ணு, பாபுவை பழி தீர்க்க நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் எழுதி வைத்து, தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.