ரூ.2 கோடி மதிப்பு மொலாசஸ் சர்க்கரை ஆலையில் தேக்கம்
தஞ்சாவூர்:சர்க்கரை ஆலையில், 2 கோடி ரூபாய் மதிப்பிலான 'மொலாசஸ்' தேங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை சார்பில், தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின், 50வது பேரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் கூறியதாவது: சர்க்கரை ஆலையில் மொலாசஸை தேக்கி வைக்க, 14,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு தொட்டி உள்ளது. தற்போது, 2 கோடி ரூபாய் மதிப்பிலான 1,400 டன் மொலாசஸ் தேங்கி உள்ளது. தேங்கிய மொலாசஸை விற்பனை செய்ய வேண்டும். கடந்த 2010ல் சர்க்கரை ஆலையில் இணை மின் உற்பத்திக்காக விவசாயிகளிடமிருந்து, 11 கோடி ரூபாய் பங்கு தொகை பெறப்பட்டது. அதற்கு உரிய பாண்டு பத்திரங்களை வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர். மேலாண் இயக்குநர் அன்பழகன் கூறுகையில், ''கரும்பு டன்னுக்கு 3,500 ரூபாய் வழங்கப்பட்டாலும், வெளி சந்தையில் சர்க்கரை விலை டன்னுக்கு 4,023 ரூபாய் மட்டுமே விற்பனையாகிறது. இதை ஈடு செய்ய, அரசின் நடவடிக்கையால் ஆலையை இயக்க முடிகிறது. ''கூடுதலாக தேக்கமடைந்துள்ள மொலாசஸ் அளவீடு செய்யப்பட்டு, கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, விரைவில் விற்பனை செய்து, அத்தொகை ஆலைக்கு சேர்க்கப்படும்,'' என்றார்.