உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / பேராவூரணியில் கர்ப்பிணி பெண் மரணம் உறவினர்கள், மக்கள் மறியலால் பரபரப்பு

பேராவூரணியில் கர்ப்பிணி பெண் மரணம் உறவினர்கள், மக்கள் மறியலால் பரபரப்பு

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே கர்ப்பிணி பெண் உயிரிழந்ததால் உறவினர்களும், பொதுமக்களும் மறியலில் ஈடுபட்டு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணி துராங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பெரமையன். இவர் டிரைவராக பணியாற்றுகிறார். இவரது மனைவி உஷா(24). இவர் கர்ப்பிணியாக இருந்ததார். நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் பேராவூரணி அரசு மருத்துவமனையில் உஷாவை சேர்த்துள்ளனர். அப்போது டாக்டர்கள் யாரும் இல்லாததால் நர்ஸ் பிரசவம் பார்த்ததாகவும், அதில் ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டதால் அவர் இறந்து விட்டார் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.ஆனால் ஒரு தரப்பினரோ, பிரசவத்திற்கு சேர்த்த உஷாவை பணி மருத்துவர் டாக்டர் ஜவகர் சிகிச்சை அளிக்காமல், தலைமை மருத்துவர் காந்தியிடம் சொல்லி தஞ்சைக்கு கொண்டு போக சொல்லியுள்ளனர். ரத்த போக்கு அதிகமாக இருந்த நிலையில் உஷா தஞ்சை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார் என்று கூறுகின்றனர்.கர்ப்பிணி உயிரிழந்ததால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள், 'பிரசவம் பார்க்கக் கூட பயனற்ற இந்த மருத்துவமனையும், மருத்துவர்களும் தேவையே இல்லை' என கூறி மருத்துவமனையை தாக்கினர். பின்னர் அந்த வழியே வந்த அரசு பஸ்ஸின் கண்ணாடி முழுவதையும் அடித்து உடைத்தனர்.கலவரம் கேள்விபட்டு சம்பவ இடத்திற்கு வந்த ஏ.எஸ்.பி., வாகனம், தாசில்தார் ஜீப், கும்பகோணம் மருத்துவ அலுவலக பணியாளர் வாகனம் உள்பட பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.கலவரங்களைத் தொடர்ந்து வி.ஏ.ஓ.,கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் 11 பேர் மீதும், தலைமை டாக்டர் காந்தி கொடுத்த புகாரின் பேரில் 12 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து கலவரம் நீடிக்கும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்