மேலும் செய்திகள்
செப். 15 ல் ஒருபோக சாகுபடிக்கு தண்ணீர்
24-Aug-2024
கூடலுார்: 18ம் கால்வாயில் தூர்வாரி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாசன விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து கூடலுார், கம்பம், உத்தமபாளையம், பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம் வழியாக போடி வரை செல்லும் 18ம் கால்வாய் 55 கி.மீ., தூரம் கொண்டதாகும். முல்லைப் பெரியாறு அணையில் நீர் இருப்பைப் பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இக்கால்வாய் மூலம் 55 கண்மாய்கள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து 30 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி விவசாய நிலங்கள் பயன்பெறும். இது தவிர 6839 ஏக்கர் பரப்பளவில் நேரடி பாசனமும் உள்ளது.கடந்த ஆண்டு அணையில் நீர் இருப்பு போதுமானதாக இருந்த போதிலும் மூன்று மாதங்கள் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கரைப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றாததாலும், தூர் வாராததாலும் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. சீரமைத்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தபோதிலும் கடைமடை வரை தண்ணீர் செல்லாமல் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது. அதனால் இந்த ஆண்டு முன்கூட்டியே 18ம் கால்வாய் தூர்வாரி உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என 18ம் கால்வாய் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.ராமராஜ், தலைவர், 18ம் கால்வாய் விவசாயிகள் சங்கம், கோம்பை: கடந்த ஆண்டு 18ம் கால்வாய் தூர் வாராததால் மிகக் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 55 கண்மாய்களில் 4 கண்மாய்கள் மட்டுமே நிரம்பியது. கரைப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றவில்லை. சீமை கருவேல மரங்கள், செடி கொடிகள் அகற்றவில்லை. தற்போது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால் இந்த ஆண்டு கால்வாய் தூர்வாரி விரைவில் தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
24-Aug-2024