உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 3000 ஆண்டு பழமையான இரும்பு உருக்கு ஆலை கண்டுபிடிப்பு மயிலாடும்பாறை அருகே சுடுமண் குழாய் குவியல்

3000 ஆண்டு பழமையான இரும்பு உருக்கு ஆலை கண்டுபிடிப்பு மயிலாடும்பாறை அருகே சுடுமண் குழாய் குவியல்

கடமலைக்குண்டு: தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே உள்ள மீன்பாறை குட்டத்தை ஒட்டிய வடக்கு பகுதியில் பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய 3000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்காலையை கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான செல்வம் கண்டுபிடித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:மயிலாடும்பாறை அருகே வைகை ஆறு துவங்கி மீன்பாறை குட்டம் முடியும் பொன்னம்படுகை ரோடு வரை சங்கிலியாண்டி, சரவணன், சென்றாயன் ஆகியோர்களுக்கு சொந்தமான 50 ஏக்கர் பரப்பில் இரும்பு கசடுகளும் உருக்கப்பட்ட இரும்புகளும் அதிகம் கிடைக்கின்றன.மூல வைகை பகுதியில் பல இடங்களில் இரும்பு கசடுகள் கிடைத்தாலும் கூட, பெரிய அளவில் இரும்பு உருக்கு ஆலைகள் இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை. இரும்பை உருக்க உலைகள் அமைத்து செம்பிரங்கல் போன்ற கல்லாலான மூலப் பொருட்களில் இருந்து இரும்பை பிரித்தெடுத்திருப்பது தெரியவந்துள்ளது. அவைகளை உலைகள் மூலம் கொதிநிலைக்கு கொண்டு சென்று கற்களில் இருந்து இரும்பை பிரித்தெடுத்திருக்கின்றனர். அப்படியான குவியல்கள் இரும்புக் கழிவு குவியல்களாக இங்கு கிடைக்கின்றன. சுடு மண்ணால் ஆன குழாய்கள் சிதைவுற்ற நிலையில் குவியலாக பல இடங்களில் உள்ளன. இவை உலை அமைப்புகளை எரியூட்டுவதற்காக துருத்தி போல தூரத்தில் இருந்து காற்றைச் செலுத்த பயன்படுத்தி இருக்கின்றனர். மேலும் இரும்பை உருக்கி கம்பி வடிவமாக கருவிகள் செய்வதற்கும் குழாய் அமைப்பை பயன்படுத்தி இருக்கலாம். பழங்கால தமிழ் மக்கள் இரும்பு தொழில் நுட்பம் பற்றிய அறிவும், திறமையும் பெற்றிருந்தனர்.

ஆயுதங்கள் தயாரிப்பு

இரும்பை உலையில் இருந்து பிரித்தெடுத்த பின் கத்தி, ஈட்டி, கோடாரி, வேல், எடை கற்கள் உள்ளிட்ட தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பல பொருட்களை தயாரித்துள்ளனர். இங்கு தயாரிக்கப்பட்ட இரும்பு பொருட்கள் வருஷநாட்டு பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ததுடன் மற்ற பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருப்பதை அறிய முடிகிறது. மக்கள் பயன்பாட்டில் இருந்த செர்ட் வகை நுண் கருவிகள், ரவுலட்டட், அரிட்டைன் வகை மண் ஓடுகள், அரவை கற்கள், முதுமக்கள் தாழி அதிக அளவில் கிடைக்கின்றன. பெருங்கற்கால நினைவுச் சின்னங்களான கல்திட்டை, கல் படுக்கை, கற்குவை நிரம்ப இருந்ததால் இப்பகுதியை பிரமிடு தோட்டம் என்ற பெயரில் மக்களும் நில உரிமையாளர்களும் அழைக்கின்றனர். முற்கால பாண்டியர்கள் காலத்தில் ஒரோமில் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இன்றைய மயிலாடும்பாறை தொல் பழங்காலத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் வாழ்ந்து வருவதை பல்வேறு தொல்லியல் சான்றுகளை கொண்டு நிரூபிக்க முடியும். இதை வைகை நதி நாகரீகத்திற்கான தனித்துவம் என்றே கூற வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்