| ADDED : ஜூலை 27, 2024 05:19 AM
கம்பம் : ஊராட்சி தலைவர்களின் பதவி காலம் 5 மாதத்தில் முடிவிற்கு வருவதால் பதவிக்கான 'கவுண்ட் டவுன்' துவங்கியது.தமிழகத்தில் ஊராட்சிகளுக்கு ஒரு கட்டமாகவும், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஒரு கட்டமாகவும் தேர்தல் நடத்தப்பட்டது. மாநிலத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளில் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவி காலம் முடிய இன்னமும் 5 மாதங்களே உள்ளது. வரும் 2025 ஜனவரி 5 ல் இவர்களின் பதவி முடிவடைவதால் பதவியின் நாட்கள் எண்ணப்படுகிறது.கடைசி 6 மாதங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளையும் அரசு குறைத்து விடும் என்பதால் ஊராட்சி தலைவர்கள் கவலையில் உள்ளனர். இது தொடர்பாக ஊராட்சி தலைவர்கள் சிலர் கூறுகையில், லட்சக்கணக்கில் பணம் செலவழித்து பதவிக்கு வந்தோம். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. எல்லா வரியினங்களையும் அரசு எடுத்துக் கொண்டு மாத இறுதியில் கிள்ளி கொடுத்தது. நாங்கள் எதிர் பார்த்து வந்தது ஒன்று. இங்கு நடந்தது வேறொன்று. செக் போடுவதில் கூட துணைத் தலைவர், ஊராட்சி செயலர் என மூவரையும் இணைத்து விட்டனர். தலைவர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. செக்கும் போட முடியாது. ஆனால் இந்த 5 ஆண்டு பதவி காலத்தில் பணிளை முழு திருப்தியுடன் செய்துள்ளோம். பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் ஊராட்சி தலைவர்கள் சிறப்பாக பணியாற்றினர் என்றனர்.