| ADDED : ஜூன் 02, 2024 04:16 AM
பெரியகுளம்: பெரியகுளத்தில் தயாரிக்கப்படும் விளக்குமாறு ஹரியானா மாநிலத்தில் வரவேற்பு பெற்றுள்ளது.பெரியகுளம் தாலுகா பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, தாமரைக்குளம், லட்சுமிபுரம், தேவானப்பட்டி, கெங்குவார்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. இப் பகுதியைச் சேர்ந்த சிலர் தென்னங்கீற்றை கிழித்து தென்னக்கிடுகும், விளக்குமாறு தயார் செய்வதை குடிசை தொழிலாக செய்து வருகின்றனர். பெரியகுளம் பகுதியில் தயாராகும் விளக்குமாறு கெட்டித்தன்மை அதிகம் உள்ளதால் எளிதில் தூய்மைப்படுத்தலாம். அதிக நாட்கள் பயன்படுத்தலாம். உபயோகபடுத்துவதற்கு எளிதாக இருக்கும்.முதல் மரியாதை படவசனம்: நடிகர் சிவாஜி கணேசன் நடித்த, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான முதல் மரியாதை படத்தில் 'நடிகை வடிவுக்கரசி விளக்குமாற்றால் நடிகை ராதாவை' அடிப்பார்.அப்போது பெரியகுளத்தில் இருந்து வாங்கி வந்த விளக்குமாறு என வடிவுக்கரசி தெரிவிப்பார். அந்தளவிற்கு பெரியகுளம் பகுதி விளக்கமாற்றிற்கு முத்திரை பதித்துள்ளவியாபாரி ஆண்டவர் கூறுகையில்: பெரியகுளம் பகுதிகளில் அதிகளவும், மாவட்டத்தில் பிற பகுதிகள் என விளக்குமார்கள் சேகரிக்கப்படுகிறது. இங்கு டன் ரூ. 30 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்படும். தேனி அருகே வளையப்பட்டியில் விளக்குமார்கள் மொத்தம் சேர்த்து மாதம் 30 டன் வீதம் ஹரியானா மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கு ஒரு விளக்குமாறு ரூ.100க்கு விற்கப்படுகிறது. இதனால் கணிசமான லாபம் கிடைக்கும் என்றார்.