| ADDED : மார் 26, 2024 11:57 PM
கூடலுார் : மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.4.98 லட்சம் தேர்தல் நிலைக்குழுவினர் பறிமுதல் செய்தனர்.தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் குமரன் தலைமையில் தமிழக கேரள எல்லையான லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபம் முன்பு நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.கேரளா கோட்டயத்தில் இருந்து காரில் வந்த நேபியிடம் ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சங்கனாச்சேரியில் இருந்து வந்த மற்றொரு காரில் சியாலிடம் ரூ.ஒரு லட்சம் என மொத்தம் ரூ. 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உத்தமபாளையம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. ரூ.1.98 லட்சம் பறிமுதல்
தேனி ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கண்டமனுார் அண்ணாநகரில் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இனாம்செட்டிபட்டி பகுதியை சேர்ந்த மூர்த்தி காரில் வந்தார். காரை சோதனையிட்ட போது அதில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.69ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.நேற்று இரவு 7:00 மணிக்கு ஆண்டிபட்டி கணவாய் சோதனை சாவடியில் நிலைக்குழு அலுவலர் குபேந்திரநாத் தலைமையில் சோதனை நடந்தது. அதில் கொடுவிலார்பட்டி, பள்ளபட்டியை சேர்ந்த சிவசங்கர் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.29 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த ரூ.1.98 லட்சத்தை ஆண்டிபட்டி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.