| ADDED : ஜூலை 25, 2024 11:33 PM
தேனி:துபாயை சேர்ந்த கிரசர் நிறுவன உரிமையாளரிடம் வங்கியில் ரூ.100 கோடி கடன் பெற்றுத்தர ரூ.1 கோடி ரொக்கமாக பெற்று ரூ.55 லட்சம் மோசடி செய்த கும்பகோணத்தை சேர்ந்த தனசேகரன் 54, மீது தேனி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி காட்டுநாயக்கன்பட்டி கண்ணன் 52. இவரது குடும்பத்தினர் 2001 முதல் துபாயில் ‛அனிஜம் சேண்ட் மற்றும் ஸ்டோன்ஸ் டிரேடிங்' என்ற பெயரில் கிரசர் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். கண்ணன் தனது தொழிலை விரிவுபடுத்த 35 வாகனங்கள் தேவைப்பட்டுள்ளது. கண்ணன் இந்தியாவில் தனது தொழிலுக்கு வங்கியில் ரூ.100 கோடி கடன் பெறுவதற்காக 2022 ஜனவரியில் தேனிக்கு வந்தார். அப்போது அவரது நண்பர்கள் வினோத், ரமேஷ், ராமசாமியை சந்தித்தார். அந்த நண்பர்கள் ‛கும்பபோணத்தில் சி.டி., மானிடரி அட்வைஸரி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி ஆலோசனை நிறுவனம் நடத்தி வரும் கும்பகோணம் திருநாகேஸ்வரம் கச்சேரி குல தெருவை சேர்ந்த தனசேகரனை அறிமுகம் செய்தனர். அவர், கண்ணனிடம், ‛வங்கியில் ரூ.100 கோடி கடன் பெற முன்பணமாக 1 கோடி டிபாசிட் செய்ய வேண்டும் என்றார். அதனை நம்பிய கண்ணன் 2022 மே 20ல் தனது வீட்டில் வைத்து ரூ.45 லட்சத்தை ரொக்கமாக தனசேகரனிடம் கொடுத்தார். அதன் பின், 2022 மே 25ல் தனசேகரன் வீட்டில் வைத்து ரூ.44 லட்சம் என மொத்தம் ரூ.89 லட்சம் கொடுத்தார். பின் தனசேகரன், கண்ணனுக்கு எந்தவித வங்கிக் கடனும் பெற்றுத்தர வில்லை. பணத்தை திருப்பிக்கேட்ட கண்ணனிடம் பல காரணங்களை கூறி தொடர்ந்து ஏமாற்றினார். பின் ரூ.34 லட்சத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு மீதியுள்ள ரூ.55 லட்சத்தை திருப்பித்தராமல் கொலை மிரட்டல் விடுத்து மோசடி செய்தார்.பாதிக்கப்பட்ட கண்ணன் தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிமன்ற உத்தரவில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., பாஸ்கரன் ஆகியோர் தனசேகரன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.