| ADDED : ஜூலை 13, 2024 04:33 AM
போடி : போடி பகுதியில் பச்சை மிளகாய் விலை சரிவை ஈடுகட்டும் அகத்திக்கீரை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.போடி அருகே விசுவாசபுரம், பத்திரகாளிபுரம், சிலமலை, அம்மாபட்டி, டொம்புச்சேரி, தேவாரம், பொட்டிபுரம், ராமகிருஷ்ணபுரம் உள்ளிட்ட பகுதியில 5 ஆயிரம் ஏக்கரில் பச்சை மிளகாய் பயிரிட்டுள்ளனர். பச்சை மிளகாய்க்கு சில நேரங்களில் விலை இல்லாமல் போனால், ஏற்படும் பாதிப்பை சரிகட்டும் வகையில் ஊடுபயிராக அகத்தி கீரைகளை நடவு செய்து வருகின்றனர். ஆறு அடி உயரம் அகத்தி கீரை நன்கு வளர்ந்த பின்பு, வெட்டி பருத்தி, பச்சை மிளகாயின் அடியில் புதைத்து உரமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அடுத்த சாகுபடிக்கு அதிக அளவில் பலன் தரும் நிலை ஏற்படுகிறது. பலர் அகத்தி குச்சிகள், கீரைகளை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்தும் வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில் : மழை இல்லாத காலங்களில் பச்சை மிளகாய், பருத்தி பயிரிடுவதன் மூலம் சில நேரங்களில் விளைச்சல் மட்டுமின்றி விலையும் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க எப்போதும் பலன் தரக்கூடிய வகையில் பருத்தி, பச்சை மிளகாய்க்கு ஊடு பயிராக அகத்திக்கீரை பயிரிட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.ஊடு பயிராகவும், உரத்திற்காகவும் அகத்தி கீரைகளை நடவு செய்துள்ளோம் என்றனர்.