| ADDED : ஜூலை 13, 2024 05:45 PM
பெரியகுளம்:தேனி மாவட்டம் பெரியகுளம் எண் 2 இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆறு மணி நேரம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.87,500 ஐ பறிமுதல் செய்து சார்பதிவாளர் பரமேஸ்வரி உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இந்த அலுவலகத்தில் சார் பதிவாளர் பரமேஸ்வரி 56, அலுவலக உதவியாளர் கணேசன் 58,கணினி ஆப்பரேட்டர் பிரேம்குமார் 35, கேமரா ஆப்பரேட்டர் சத்தியப் பிரியா 30, பணி செய்கின்றனர். புரோக்கர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இங்கு பத்திரப்பதிவுக்கு வருவோரிடம் அதிகமாக பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் வந்தது. இதனடிப்படையில் நேற்றுமுன்தினம் மாலை 4:00 மணிக்கு தேனி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சுந்தர்ராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, ஜெயப்பிரியா உட்பட 10 போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து இரவு 10:00 வரை 6:00 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 175 எண்ணிக்கை கொண்ட ரூ.500 நோட்டு ரூ. 87,500 பறிமுதல் செய்தனர். 35 டோக்கன் தரப்பட்டது. இதில் 20 பத்திரங்கள் மட்டுமே பதியப்பட்டது தெரிந்தது. இதையடுத்து சார்பதிவாளர் பரமேஸ்வரி, பணியாளர்கள் கணேசன், பிரேம்குமார், சத்யப்பிரியா ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.