நுாறு சதவீத தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
தேனி: மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் மாணவர்களை நுாறு சதவீத தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு நடக்கிறது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரலில் நடந்தது. பிளஸ் 2 தேர்வு 12,611 பேர் எழுதினர். இவர்களில் 11,936 பேர் தேர்ச்சி பெற்றனர். பத்தாம் வகுப்பு தேர்வு 14,225 பேர் எழுதினர். இதில் 13,177 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் பிளஸ் 2 தேர்வில் அரசு,உதவி பெறும் 10 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றன.அதே போல் பத்தாம் வகுப்பு தேர்வில் 20 அரசு பள்ளிகள் உட்பட 68 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் நுாறு சதவீத தேர்ச்சி பதிவு செய்த தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் பரிசு வழங்கினார்.நுாறு சதவீத தேர்ச்சி பெற வைத்த வகுப்பு ஆசிரியர்கள், பாடங்களில் நுாறு சதவீத தேர்ச்சி, நுாறு மதிப்பெண் பெற வைத்த ஆசிரியர்களுக்கு மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் பாரட்டு விழா நடத்தி, சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.