| ADDED : ஜூலை 13, 2024 04:25 AM
தேனி : மாவட்டத்தில் விதை ஆய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 2.25லட்சம் மதிப்பிலான விதைகள் விற்பனைக்கு தடை விதித்தனர்.மதுரை விதை ஆய்வு துணை இயக்குனர் வாசுகி தலைமையில் ஆய்வாளர்கள் முத்துராணி, அஜ்மல்கான் உத்தமபாளையம், சின்னமனுார், மார்க்கையன்கோட்டை, நாகலாபுரம், தேனி பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர். ஆய்வில் விற்பனை உரிமம், விதைக் குவியல் பகுப்பாய்வு முடிவுகள், கொள்முதல் ஆவணங்கள், பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். மேலும் இருப்பு வைக்கப்பட்டிருந்த கொத்தமல்லி, அவரை, பீன்ஸ், தக்காளி, மிளகாய், மக்காச்சோளம் விதை மாதிரிகள் பகுப்பாய்விற்கு அனுப்பபட்டது. நாற்றுப்பண்ணைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் நாற்றுகள், செடிகளுக்கு அடையாள அட்டை இல்லாமல் விற்பனை செய்த 5 நாற்றுப்பண்ணைகளுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டது.உரிய ஆவணங்கள் இன்றி விதைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 10 தனியார் விதை விற்பனை நிலையங்களில் ரூ.2.25லட்சம் மதிப்பிலான 8.5கிலோ எடையுள்ள விதைகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டன.