| ADDED : மே 27, 2024 05:57 AM
பெரியகுளம் : கும்பக்கரை அருவியில் 8 நாட்களுக்கு பின் நீர் வரத்து சீரானதால் இன்று முதல் வனத்துறை குளிக்க அனுமதி அளித்துள்ளது.பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி வட்டக்கானல், வெள்ளகெவியில் பெய்யும் மழை, கும்பக்கரை அருவி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. மே 1 முதல் மே 9 வரை வெயில் தாக்கத்தால் அருவியில் தண்ணீர் குறைந்த நிலையில், மே 10 ல் கோடைமழை துவங்கியவுடன் அருவியில் தண்ணீர் கொட்டியது. மே 12 இரவில் தொடர்ந்து மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மே 13, 14 சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. மே 15ல் நீர் வரத்து சீரான நிலையில் மீண்டும் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. மே 18 மாலை 6:00 மணிக்கு கனமழை தொடர்ந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மே 19 முதல் மே 26 வரை 8 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. நேற்று காலை 8:00 மணி முதல் மாலை 5:00 வரை தண்ணீரின் வேகம் கணக்கிடப்பட்டது. இதில் நீர் வரத்து சீரானதால் இன்று (மே 27ல்) முதல் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.