உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பூத்துக் குலுங்கும் பூக்கள், நோய்களை கட்டுப்படுத்தும் மூலிகைச் செடிகள் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு பஸ் டிரைவர்

பூத்துக் குலுங்கும் பூக்கள், நோய்களை கட்டுப்படுத்தும் மூலிகைச் செடிகள் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு பஸ் டிரைவர்

கோடை கால மாதங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் நிலத்தடி நீர்மட்டம் குறையும். இதனை அறிந்த மரங்கள் தன்னுடைய நீரின் தேவையை குறைக்க இலைகளை உதிர்த்து கொள்கின்றன. மரங்கள் இயற்கையின் உயிர்நாடி. அவை உலகில் வசிக்கும் 50 சதவீத உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட முக்கிய காரணம் வனங்கள் அளிக்கப்படுவது தான். மனிதன் நடவடிக்கையால் அடிக்கடி வனப்பகுதியில் தீ பிடிக்கும் சம்பவத்தால் விலங்குகள் அழிவதுடன், பசுமையான காடுகள் இன்று அரிதாகி விட்டன. மரங்களை வெட்டி அழிப்பதால் தண்ணீர் தூய காற்றும் கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை தவிர்க்க போடியில் வசிக்கும் அரசு பஸ் டிரைவர் ஒருவர் தனது வீட்டின் வளாகத்திலேயே மூலிகைச் செடிகள், தாவரங்கள், பூச்செடிகள், மரங்களை வளர்த்து பராமரித்து அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

ஐந்து மரக்கன்றுகள் நடுவது அவசியம்

டி.மணிவாசகன், அரசு பஸ் டிரைவர் : வீட்டை சுற்றி இடம் இல்லாத போது மாடித்தோட்டம் அமைத்து மருத்துவ குணம் வாய்ந்த இயற்கை காய்கறிச் செடிகள் வளர்ப்பதால் சுத்தமான காற்றான ஆக்சிஜன் கிடைக்கிறது. எங்கள் வீட்டில் வரவேற்பார்களே பூத்துக் குலுங்கும் பூக்கள் தான். எனக்கு இயற்கை மீது ஆர்வம், 'தி கிரீன் லைஃப் பவுண்டேஷன்' உறுப்பினராக இருப்பதாலும் வீட்டின் முன் பகுதி, வளாகப் பகுதியில் செம்பருத்தி, அரளி, ஓமம், வெற்றிலை, அடுக்கு மல்லி, துளசி, கனக கள்ளி, முப்பிரண்டை, இன்சுலின் செடி, தொட்டால் சிணுங்கி, செண்பகம், மனோரஞ்சிதம், நந்தியா வட்டை, வீட்டின் அருகே ஒண்டிவீரப்பன் சாமி கோயில் வளாகத்தில் மருதம், புங்கை, சந்தனம் உள்ளிட்ட மரங்களை மூன்று ஆண்டுக்கு மேலாக வளர்த்து வருகிறேன். தினமும் காலை, மாலை நேரங்களில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கிறேன். பூத்துக் குலுங்கும் பூக்களில் உள்ள தேனை குடிப்பதற்காக 'கம்மிங்' பேர்டு, தேன் சிட்டு உள்ளிட்ட பறவைகள் வருகின்றன. பூமியை நஞ்சாகும் பாலிதீன் பயன் பாட்டை அகற்றி, வீட்டிற்கு ஐந்து மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதை கட்டாய சட்டமாக்க அமல்படுத்த அரசு முன் வர வேண்டும். இதனால் நம் சந்ததியினரை காப்பாற்றலாம்., என்றார்.

அதிக ஆக்சிஜன் தரும் பவளமல்லி

ஆர்.செல்வம், சமூக ஆர்வலர், போடி : வீடுகளில் பயன் படுத்தப்படும் ஸ்பிரே, சிந்தடிக் பெயின்டிங், கெமிக்கல் கலந்த ரசாயனப் பொருட்கள் என பல வழிகளில் சுற்றுப்புற சூழல் மாசடைகிறது. இதில் இருந்து தப்பிக்க வீடுகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், நீர்வரத்து ஓடை, ரோட்டின் இருபுறங்களிலும் நல்ல காற்றை தரக்கூடிய மரங்களை நட்டு வளர்க்கப்படுவதை கட்டாயமாக்க வேண்டும். வெயில் அதிகரித்து வெப்பம் சம்பந்தமான நோய்கள் தற்போது ஏற்படுகின்றன. நோய்கள் வராமல் தடுக்க மூலிகை செடிகளும், சுத்தமான காற்றை சுவாசிக்கும் வகையில் வீடுகளில் காய்கறி தோட்டம் அமைப்பது மிகவும் பயன் உள்ளதாக அமையும். அதிக ஆக்சிஜன் தரும் பவளமல்லி, மந்தாரை போன்ற தாவரங்களை வளர்க்கலாம். இவை வீடுகளுக்கு வரும் தூசுகளை தடுத்து உள் வாங்கிக் கொள்ளும். ஜன்னல் அருகே ஆப்பிரிக்கன் துலிப் மரங்களை வளர்க்கலாம். செடிகள், மரக்கன்றுகள் நடுவதன் மூலம் பசுமையான மாற்றத்தை ஏற்படுத்துவதோடு மாசில்லா போடி நகரை உருவாக்க முடியும்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ