| ADDED : ஜூன் 06, 2024 04:05 AM
கம்பம், : பசுக்கள், எருமை இனங்களில் சினைப் பிடிக்கும் திறனை அதிகரிக்க கால்நடை பராமரிப்பு துறை சிறப்பு திட்டம் அமல்படுத்த வேண்டும் என கால்நடை வளர்ப்போர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கால்நடைகளில் பசுக்கள், எருமை இனங்களில் சினை பிடிக்கும் தன்மை குறைய துவங்கியது. அரசு கடந்தாண்டு தமிழகம் முழுவதும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்களை நடத்தியது. அதில் பசுக்கள், எருமை மாடுகளுக்கு சரிவிகித உணவு கிடைக்காததே, சினை பிடிக்கும் தன்மை குறைந்து, மலட்டு தன்மை அதிகரித்து வருவது கண்டு பிடிக்கப்பட்டது. சரிவிகித உணவு கிடைக்கவில்லை என்றால் பால் உற்பத்தி குறைந்து சினை பிடிக்கும் தன்மை குறையும். இந்த காரணங்களால் தான் எருமை இனமே இன்றைக்கு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்னமும் இதில் கவனம் செலுத்தவில்லை என்றால் பசுக்கள் இனமும் அழிந்து விடும் என்கின்றனர்.இதற்கான தீர்வு குறித்து கால்நடை பராமரிப்பு துறை டாக்டர்கள் கூறுகையில், சரிவிகித உணவு என்பது கொடுக்கும் பாலுக்கு ஏற்ப பசு அல்லது எருமைக்கு தீவனம் வழங்க வேண்டும். அடர் தீவனம், உலர் தீவனம், பசுந்தீவனம் உரிய விகிதத்தில் தர வேண்டும். உதாரணமாக ஒரு பசு 10 லிட்டர் பால் தருகிறது என்றால், அந்த பசுவிற்கு அடர் தீவனம் புண்ணாக்கு, மாவு போன்றவைகள் 2 முதல் 3 கிலோ, உலர் தீவனம் வைக்கோல், சோளத்தட்டை 3 கிலோ, பசுந்தீவனம் புல்லு 20 முதல் 30 கிலோ கொடுக்க வேண்டும். இதுவே சரிவிகித உணவாகும். பால் கறப்பது 10 லிட்டருக்கு அதிகமாகும் போது, ஒவ்வொரு லிட்டருக்கும் தீவனத்தை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மாடுகளின் எடை குறையாது . நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருக்கும். குறிப்பாக சினை பிடிக்கும் தன்மை அதிகரிக்கும் என்கின்றனர்.கால்நடைகள் வளர்ப்போர் கூறுகையில்,சரிவிகித உணவு கொடுக்காததால் எருமை இனம் இல்லாமல் போய் விட்டது. பசுக்களில் சினைப் பிடிக்கும் தன்மை குறைந்து வருகிறது. இந்த நிலையை சரிப்படுத்த சிறப்பு திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிவித்து அமல்படுத்த வேண்டும். என்று கால்நடை வளர்ப்போர் கூறியுள்ளனர்.