| ADDED : ஆக 18, 2024 02:08 AM
தேனி:தேனியைச் சேர்ந்த 8 பேருக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.11 கோடி மோசடி செய்து போலி பணி நியமன ஆணை வழங்கிய சென்னையைச் சேர்ந்த கிரிக்கெட் பயிற்சியாளர் பூகீஸ்வரனை 47, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பெரியகுளம் தென்கரை சிவபாலன். இவரது உறவினர் தேனி ஊஞ்சாம்பட்டி ஜெயம்நகர் குகன்ராஜா மூலம் சென்னை ஆவடி பள்ளிவாசல் தெரு பூகிஸ்வரன் அறிமுகமானார். இவர் கிரிக்கெட் பயிற்சியாளராகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளராகவும் உள்ளார். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இருவரும் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக சிவபாலன் உட்பட 8 பேரிடம் தெரிவித்தனர். அதை அவர்களும் நம்பினர்.வேலைக்காக சிவபாலன் ரூ.38.61 லட்சம் வழங்கினார். பின் வங்கி கணக்கு மூலம் ரூ.73.28 லட்சம் என ரூ.ஒரு கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 500 வாங்கினர். சிவபாலனுக்கு ரயில்வேத்துறையில் வேலை கிடைத்ததாக போலி பணி நியமன ஆணையை பூகீஸ்வரன் வழங்கினர். விசாரித்த போது நியமன ஆணை போலி என தெரிந்தது.சிவபாலன் உள்ளிட்ட 8 பேர் தேனி எஸ்.பி.,யிடம் புகார் அளித்தனர். எஸ்.பி., உத்தரவின்படி பூகீஸ்வரன், ஜெயஸ்ரீ, குகன்ராஜா மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.சென்னையில் இருந்த பூகீஸ்வரனை இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி தலைமையில் போலீசார் நேற்று கைது செய்தனர்.