| ADDED : ஆக 04, 2024 06:13 AM
ஆண்டிபட்டி : தேனி மாவட்டத்தில் வேப்ப முத்துக்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காததால் சேகரிப்பில் தொய்வு ஏற்பட்டு வரத்து குறைந்து கடந்த சீசனை விட 50 சதவீத அளவே கிடைப்பதால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.மூலிகை தன்மை கொண்ட வேப்ப மரங்கள் மலைப்பகுதி, வனப்பகுதி, ஓடை, நத்தம் புறம்போக்கு நிலங்களில் தாமாக வளரும் தன்மை கொண்டது. பள்ளி, கல்லூரி வளாகங்கள், அரசு, தனியார் நிறுவன வளாகங்கள், வீடுகள் தனியார் தோட்டம், காடுகளில் இந்த வகை மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை, வைகாசியில் பூத்துக் குலுங்கும் வேப்ப மரங்களில் இருந்து ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் கிடைக்கும் பழங்கள் பறவைகளுக்கு உணவாகிறது. வேப்ப மரங்களில் இருந்து உதிரும் பழங்கள் சேகரித்து விதைகள் எண்ணெய் தயாரிப்புக்கும், இயற்கை உரமாகவும் பயன்படுகிறது. இதனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வேப்ப முத்துக்கள் சேகரிப்பு கிராமங்களில் பகுதி நேர தொழிலாக தொடர்கின்றனர். கடந்த ஆண்டு கிலோ ரூ.140 வரை இருந்த வேப்பமுத்துக்கள் விலை தற்போது பாதியாக குறைந்து ரூ.70 முதல் 72 வரை உள்ளது. விலை குறைவால் வேப்ப முத்துக்கள் சேகரிப்பு தொழிலாளர்களிடம் ஆர்வம் இல்லை. இதனால் வரத்து குறைந்துள்ளது.வேப்பமுத்து சேகரிப்போர் கூறியதாவது: தினமும் 5 கி.மீ.,தூரம் நடந்து சென்று மரங்களின் இருப்பிடம் அறிந்து வேப்பமுத்துக்கள் சேகரிக்கிறோம். நாள் முழுக்க சேகரித்தாலும் 3 கிலோ அளவு கூட சேகரிக்க முடியவில்லை. இந்நிலையில் விலை குறைவு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. மரங்கள் வெட்டுவதை தடுக்க வேண்டும்
வியாபாரி டி.ராஜகோபாலன்பட்டி ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மாவட்டத்தில் வேப்ப மரங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைகிறது. மூலிகை தன்மை கொண்ட வேப்ப மரங்களில் இருந்து ஆக்சிஜன் அதிகம் கிடைக்கும். மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 100 டன்னுக்கும் கூடுதலாக வேப்பமுத்துக்கள் கிடைக்கும். இந்த ஆண்டு வரத்து மிகவும் குறைந்துள்ளது. 50 சதவீத அளவே வரத்து உள்ளது. இதனால் ஏற்றுமதி இல்லாததால் தேவை குறைந்துள்ளது. இதனால் விலையும் இல்லை. விலை இல்லாததால் தொழிலாளர்களிடம் சேகரிக்கும் ஆர்வமும் இல்லை. மரங்களில் இருந்து உதிரும் வேப்பமுத்துக்கள் ஆங்காகே மண்ணில் புதைந்து முளைத்து வீணாகிறது அல்லது மக்கி விடுகிறது. வேப்ப மரங்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் காளவாசல் தேவைக்காக வேப்ப மரங்கள் வெட்டுவதை தடுக்கவும் வனத்துறை, வருவாய்த்துறை உட்பட பல்வேறு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.