கம்பம்: கேசவபுரம் கண்மாயில் துார்ந்து போன வரத்து வாய்க்கால், தண்ணீரை வெளியேற்றும் மறுகால் வாய்க்கால் இல்லாததால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்,கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டிக்கும் இடையில் 40 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கேசவபுரம் கண்மாய். சுருளிப்பட்டி , நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி வரை உள்ள நூற்றுக்கணக்கான பாசன கிணறுகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர இக் கண்மாய் பயன்படுகிறது. கோடை காலங்களில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு குடிநீர் தேவையை நிறைவேற்றுகிறது. மேகமலையில் பெய்யும் மழை நீர் கூத்தனாட்சி மலை வழியாக இந்த கண்மாய்க்கு வந்து சேருகிறது. கூத்தனாட்சி மலையில் இருந்து இந்த கண்மாய்க்கு தண்ணீர் வரும் சுமார் 2 கி.மீ. தூர வரத்து வாய்க்கால் செடி, கொடிகள் வளர்ந்து, பராமரிக்கப்படாததால், தண்ணீர் வருவதற்கு வழியில்லாமல் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ரூ. 40 லட்சத்தில் கண்மாய் பராமரிப்பு பணி செய்தும் தண்ணீர் வெளியேற்றுவதற்குரிய வாய்க்கால் அமைக்கப்படவில்லை வாய்க்கால் செல்லும் வழியில் உள்ள தோட்ட விவசாயிகள், ஆக்கிரமிப்புகளை சர்வே செய்து நிலத்தை எடுத்து வாய்க்கால் அமைத்துக் கொள்ள கூறிய பின்பும், அதிகாரிகள் அந்த பணி மேற்கொள்ளாததால் தண்ணீர் வெளியே செல்ல வழியில்லை. கண்மாயில் குப்பைகளை கொட்டவும், தென்னை முட்டுக்களை போடும் இடமாக மாறி விட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பே இக் கண்மாயின் ஒரு பகுதியில் சுமார் 10 ஏக்கர் ஆக்கிரமித்து பலன் தரும் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் அகற்றப்படவில்லை. கண்மாயில் எஞ்சிய பகுதிகளாவது முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. வரத்து கால்வாய் துார் வார வேண்டும்
ரவீந்திரன், விவசாயி, காமயகவுண்டன்பட்டி :கேசவபுரம் கண்மாய் பராமரிப்பு பணிகள் எனது தலைமையில் நடைபெற்றது. ஆனால் எங்களால் முழுமையாக பணிகள் செய்ய முடியவில்லை- பல்வேறு இடையூறுகள் இருந்தது. முக்கியமாக தண்ணீர் வரும் வரத்து வாய்க்காலை தூர் வார வேண்டும். தண்ணீர் வெளியே செல்ல மடை அமைக்கப்பட்டுள்ளது. சர்வே செய்து நிலத்தை எடுத்து உபரி நீர் வெளியே செல்ல வாய்க்கால் அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்
பார்த்திபன், விவசாயி, காமயகவுண்டன்பட்டி : இந்த கண்மாய் இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பயன்பட்டு வருகிறது. ஆனால் வரத்து வாய்க்கால் தூர்ந்து போனதால், தண்ணீர் வரத்து இல்லை. கண்மாய் முழு அளவில் நிரம்பினால் தோட்ட கிணறுகளின் நீர் மட்டம் குறையாமல் இருக்கும். ஆக்கிரமிப்புகளை அகற்றி உபரி தண்ணீரை வெளியேற்ற மறுகால் வாய்க்கால் அமைக்க வேண்டும். மீண்டும் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும். விவசாயிகளிடம் கண்மாயை ஒப்படைக்க வேண்டும். என்றார்.இந்த கண்மாயை பொதுப்பணித் துறையின் மஞ்சளாறு டிவிசன் கவனித்து வருகிறது. இப்படியொரு கண்மாய் இருப்பதையே அத்துறையினர் மறந்து விட்டனர்.இதனால் விவசாயிகள் கடும் அவஸ்தைக்குள்ளாகி வருகின்றோம்.