| ADDED : ஏப் 17, 2024 05:51 AM
ஆண்டிபட்டி, : தொகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் நிறைவேற்றி தருவார் என்று ஆண்டிபட்டி பகுதியில் தினகரன் மனைவி அனுராதா பிரசாரம் செய்தார்.ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட டி.பொம்மிநாயக்கன்பட்டி, டி.ராஜகோபாலன்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி, சித்தைய கவுண்டன்பட்டி, போடிதாசன்பட்டி, சண்முகசுந்தரபுரம், ரங்கநாதபுரம், பிராதுக்காரன்பட்டி, முத்தனம்பட்டி கிராமங்களில் நேற்று பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது: பூர்வ ஜென்மத்தில் செய்த பாக்கியம் தான் எங்களை உங்களுடன் இணைத்து இது போன்ற உறவை ஏற்படுத்தி உள்ளது. நான் பொது இடங்களில் அதிகம் பேசியதில்லை. தினகரன் மீது நீங்கள் வைத்துள்ள பாசத்தை நேரில் காண்பதற்காக வந்துள்ளேன். ஒவ்வொரு இடத்திலும் அவர் உங்களுடன் இருந்த 10 ஆண்டுகளில் செய்த நலத்திட்டங்களை சுட்டி காட்டுகின்றனர். அதே தினகரன் தான் தற்போதும் உங்களுக்காக உழைக்க வந்துள்ளார். குக்கர் சின்னத்தில் போட்டியிடும் அவரை வெற்றி பெறச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்திலேயே அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். உங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிச்சயம் நிறைவேற்றி தருவார், இவ்வாறு பேசினார்.