| ADDED : மே 27, 2024 06:08 AM
கம்பம் : தொடர் மழை காரணமாக கண்மாய்கள், குளங்கள், தோட்ட கிணறுகளிலும் நீர் மட்டம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.கோடை காலம் முடிந்து மழை காலம் துவங்கி விட்டது. தற்போது கோடை மழை பெய்து வருவதாக கூறினாலும், தென்மேற்கு பருவ மழையும் மே 31 முதல் துவங்க உள்ளது. நாளுக்கு நாள் மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அணைகள், கண்மாய்கள், குளங்களில் நீர்மட்டம் குறைந்து வந்தது. தற்போது மெள்ள மெள்ள அதிகரிக்க துவங்கி வருகிறது.கம்பம் பள்ளத்தாக்கில் கம்பம் வீரப்ப நாயக்கன்குளம், கேசவபுரம் கண்மாய், உத்தமபாளையம் தாமரைக்குளம் கண்மாய், குப்பிசெட்டிகுளம், சின்னமனுார் செங்குளம், உடையகுளம், கருங்கட்டான்குளம் உள்ளிட்ட பெரிய கண்மாய்களில் நீர் மட்டம் உயர துவங்கி உள்ளது.இது தவிர கம்பம் பள்ளத்தாக்கில் ரோட்டிற்கு கிழக்கு திசை, மேற்கு திசையில் உள்ள தோட்டக் கிணறுகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பயிர்கள் சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு கண்மாய்கள் தான் குடிநீர் ஆதாரமாகும். தற்போது பெய்யும் மழையின் தாக்கம் இன்னமும் அதிகரிக்கும் என்பதால், இன்னமும் சில மாதங்களுக்கு மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.