| ADDED : மே 23, 2024 03:46 AM
போடி: போடி கொட்டகுடி ஆற்றின் இரு பகுதியையும் தனி நபர்களின் ஆக்கிரமிப்பால் பாதை குறுகலாக மாறி கண்மாய்களில் மழை நீரை முழுவதும் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.கேரளா மற்றும் குரங்கணி மலைப் பகுதியில் பெய்யும் மழை நீரானது குரங்கணி, கொட்டகுடி ஆற்றில் இருந்து தேனி கொட்டகுடி ஆறு வரை செல்கிறது. குரங்கணி, கொட்டகுடி முந்தல் ரோட்டில் உள்ள ஆற்று பகுதியில் இருந்து போடி இரட்டை வாய்க்கால், அணைப்பிள்ளையார் அணை, வேட்டவராய கருப்பசாமி கோயில், கோடங்கிபட்டி, பூதிப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் கொட்டகுடி ஆற்று பகுதியின் இருபுறத்தையும் தனிநபர்கள் ஆக்கிரமித்து தென்னை, இலவம் மரங்கள் நட்டு விளை நிலங்களாக மாற்றி உள்ளனர். ஆற்றின் இருபுறமும் ஆக்கிரமிப்பால் பாதை குறுகலாக மாறி உள்ளது. இதனால் மழைநீர் சீராக செல்ல முடியவில்லை. மேலும் மழை நீர் வரும் பாதையில் மணல் மேடுகள் அமைத்து கண்மாய்களுக்கு செல்லும் நீரை மாற்று பாதையில் திருப்பி விட்டு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆற்று நீர் கண்மாய்களுக்கு எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.இதனால் மேலச்சொக்கநாதபுரம் சங்கரப்பன் கண்மாய், போடி பங்காருசாமி நாயக்கர் கண்மாய், மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய்களில் மழை நீரை முழுவதும் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. விவசாயிகள் பயன் பெறும் வகையில் குரங்கணியில் இருந்து கொட்டகுடி ஆறு முடியும் பகுதி வரை ஆற்றின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.