வெளிநாட்டு ஒப்பந்தங்கள் குறித்து வெளிப்படையான அறிக்கை தேவை முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் வலியுறுத்தல்
தேனி:முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.தேனி நாடார் சரஸ்வதி கல்லுாரி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அன்னபூர்ணா சீனிவசான் கூறிய கருத்தில் மாற்று கருத்து கிடையாது. காரம், இனிப்பிற்கு ஜி.எஸ்.டி., வரி வித்தியாசம் உள்ளது. அவர் பேசிய இடத்திலேயே அமைச்சர் பதில் அளித்து இருக்கலாம். அவரை அழைத்து மனிப்பு கேட்க வைக்கும் சூழல் தமிழர் தன்மானத்திற்கு உடன்படாதது. இதனை அரசியல் ரீதியாக பார்க்கவில்லை. நாட்டில் 26 அடுக்குகளாக இருந்து வரி 5 அடுக்கு கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் அமெரிக்கா தோற்றது. நமது நாட்டில் சாத்தியப்படுத்தி உள்ளோம். ஜி.எஸ்.டி., யை இன்னும் எளிமை படுத்த வேண்டும்.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி வெளிநாடுகளில் ஒப்பந்தம் செய்ததை வெளிப்படைத்தன்மையுடன் திட்டங்கள் தொடர்பாக மாதந்தோறும் அறிக்கை வெளியிட்டோம். முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டில் ரூ.7ஆயிரம் கோடியில் முதலீடுகள் ஈர்த்தது நல்லது தான். அவை எத்தனை இடங்களில், எந்த மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைகிறது என்பதை வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டும். சில குறிப்பிட்ட மாவட்டங்களை மட்டும் தேர்வு செய்யாமல் அனைத்து மாவட்டங்களையும் சேர்க்க வேண்டும். போதை ஒழிப்பு தொடர்பாக திருமாவளவன் முன்னெடுத்தது நல்லவிஷயம். இந்த மாநாட்டில் பங்கேற்பது பற்றி கட்சி பொதுச்செயலாளர் முடிவு செய்வார் என்றார்.