| ADDED : ஏப் 25, 2024 04:03 AM
மூணாறு, : மூணாறில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று இடுக்கி லோக்சபா தொகுதியில் பா.ஜ. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சங்கீதாவுக்கு ஆதரவாக ஓட்டுகள் சேகரித்தார். பா.ஜ., தேசிய குழு உறுப்பினர் ஸ்ரீநகரி ராஜன், தென் மண்டல பொது செயலாளர் ஹரி, மண்டல தலைவர் அழகர்ராஜ், பொது செயலாளர் கந்தகுமார், ஊராட்சி குழு தலைவர் மதியழகன், தேர்தல் பணி குழு ஒருங்கிணைப்பாளர் சோஜன்ஜோசப் உள்பட பலர் உடனிருந்தனர்.அப்போது முன்னாள் இணை அமைச்சர் பேசியதாவது:லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சி அமையும். கடந்த முறை தமிழகம், கேரளா மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் இல்லை. இடுக்கி மாவட்டத்தில் பிரச்னைகள் ஏராளம் உள்ளன. குறிப்பாக காட்டு யானை தாக்கி 40க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கவில்லை. மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட வரிசை வீடுகளில் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். குறைந்தபட்சம் 70 ஆண்டுகள் பழமையான வீடுகள் என்பதால், அவை இடிந்து விழும் நிலையில் உள்ளன. மூணாறில் வசிக்கும் வர்த்தகர்கள், பொதுமக்கள் ஆகியோரின் வீடுகள் அவர்களுக்கு சொந்தமில்லை. அனைவரும் தனியார் தேயிலை கம்பெனிக்கு வாடகை செலுத்தி வருகின்றனர். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை தேவையின்றி வாடகை கொடுக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். சுற்றுலா பகுதியான மூணாறில் கழிவறை, வாகனங்கள் நிறுத்த இடம், மருத்துவம் உள்பட அடிப்படை வசதிகள் இல்லை. தினமும் ஆயிரக்கணக்கில் பயணிகள் வந்து செல்லும் நகரில் நான்கு பொது கழிப்பறைகள் மட்டும் உள்ளன. கற்றவர்கள் அதிகம் வசிக்கும் மாநிலத்தில் கழிப்பறை கட்ட இயலாத அரசு ராஜினாமா செய்ய வேண்டும், என்றார்.