| ADDED : ஜூன் 03, 2024 03:55 AM
போடி: போடி அருகே கேரளா, குரங்கணி பகுதியில் நேற்று முன் தினம் மாலை திடீரென பெய்த கன மழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.போடி பகுதியில் மழை பெய்யாமல் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் கொட்டகுடி ஆற்றுப் பகுதியில் நீர் வரத்து இல்லை. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, நிலங்களும் வறண்டு காணப்பட்டன. நெல், சிறு தானியங்கள் பயிர் வகைகள், பருத்தி, தோட்டப் பயிர்கள் உட்பட பல ஆயிரம் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டு காந்திருந்த விவசாயிகள் கலக்கத்தில் இருந்தனர்.15 நாட்களுக்கு முன் போடி, குரங்கணி, கொட்டகுடி, சிலமலை, சூலப்புரம், ராசிங்காபுரம் பகுதியில் கன மழை பெய்தது. இதனால் கொட்டகுடி ஆற்றுப் பகுதியில் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் பங்காருசாமி நாயக்கர் கண்மாய், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய், புதுக்குளம் கண்மாய்களுக்கு நீர்வரத்து வர துவங்கியுள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கேரளா, குரங்கணி பகுதியில் திடீரென அரை மணி நேரம் பெய்த கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இருப்பினும் கொட்டகுடி ஆற்றில் வெள்ள நீர் சிறிதளவு மட்டுமே வந்தது. இதனால் அணைப்பிள்ளையார் அணை நீர் அருவியில் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே வந்தது. பெரிதும் எதிர்பார்த்து குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து, குறைந்த அளவில் வந்த தண்ணீரில் குளித்துச் சென்றனர்.