| ADDED : ஜூன் 06, 2024 04:13 AM
மூணாறு, : தேவிகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூ., சேர்ந்த ஜிஷா தேர்வு செய்யப்பட்டார்.தேவிகுளம் ஒன்றியம் 13 வார்டுகளைக் கொண்டது. அதில் இடதுசாரி கூட்டணி 8, காங்., கூட்டணி 5 வீதம் உறுப்பினர்கள் உள்ளனர். இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூ.,சேர்ந்த 13ம் வார்டு உறுப்பினர் ஜெயலட்சுமி தலைவராக பொறுப்பு வகித்தார். அக்கூட்டணியின் ஒப்பந்தப்படி அவர் தலைவர் பொறுப்பை 20 நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.அதனால் தலைவர் பொறுப்புக்கு நேற்று தேர்தல் அதிகாரியான தேவிகுளம் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் ஓட்டெடுப்பு நடந்தது.இடது சாரி கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூ., சேர்ந்த 7ம் வார்டு உறுப்பினர் ஜிஷா, காங்., கூட்டணி சார்பில் 9ம் வார்டு உறுப்பினர் ஜாக்குலின்மேரி ஆகியோர் போட்டியிட்டனர். அதில் ஜிஷா 7, ஜாக்குலின்மேரி 4 ஓட்டுகள் பெற்றனர்.ஜிஷா தலைவராக தேர்வானார். 10ம் வார்டு உறுப்பினர் லூசியம்மா ஓட்டெடுப்பில் பங்கேற்காத நிலையில் 8ம் வார்டு உறுப்பினர் நாராயணன் ஓட்டு நிராகரிக்கப்பட்டது. இருவரும் இடது சாரி கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்பது குறிப்பிடதக்கது.