| ADDED : மே 04, 2024 05:59 AM
கம்பம்: திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஊராட்சிகளில் கண்டுகொள்ளப்படவில்லை. நகராட்சி, பேரூராட்சிகளிலும் தோல்வியை தழுவி வருகிறது.உள்ளாட்சிகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பை என வீடுகளுக்கே நேரில் சென்று பிரித்து வாங்க வேண்டும். மக்கும் குப்பையிலிருந்து நுண் உரக் கூடங்களில் இயற்கை உரம் தயாரித்து, விவசாயிகளுக்கு விற்பனை செய்வது, மங்காத குப்பைகளை சிமிமென்ட் ஆலைகளுக்கு அனுப்புவது போன்றவை திட்கழிவு மேலாண்மை திட்டமாகும்.இந்த திட்டத்திற்கென ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது. குப்பைகளை பிரிப்பதற்கு ஒரு வளாகம், மண்புழு உரம் தயாரிக்க அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும், எந்த ஊராட்சியிலும் இந்த திட்டம் உருப்படியாக செயல்படுத்தப்டவில்லை. இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட குப்பை தொட்டிகள், பேட்டரி கார்கள், தரம் பிரிக்கும் மையங்கள் பயனற்ற நிலையில் வீணாக உள்ளன.இதனால் சேகரமாகும் குப்பைகளை ஊருக்கு வெளியில் கொண்டு போய் தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் ஊராட்சிகளில் குப்பைகள் தேக்கமில்லை. ஆனால் சுற்றுப்புறச்சூழல் பெரிய அளவில் மாசு பட்டு வருகிறது.ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை காணாமல் போய் விட்டதென்றால், நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் படிப்படியாக காணாமல் மறைந்து வருகிறது. கலெக்டர் ஷஜீவனா வாரம் ஒரு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி என விசிட் செய்து, திடக்கழிவு மேலாண்மை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.