உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சேதமடைந்த அரசு கல்லுாரிக்கு நிரந்தர கட்டடம் கட்டவில்லை: ஐந்து ஆண்டுகளாக அதிகாரிகள் அலட்சியம்

சேதமடைந்த அரசு கல்லுாரிக்கு நிரந்தர கட்டடம் கட்டவில்லை: ஐந்து ஆண்டுகளாக அதிகாரிகள் அலட்சியம்

மூணாறு : மூணாறில் அரசு கல்லூரி கட்டடம் சேதமடைந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் நிரந்திர கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு நகரில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் அரசு கல்லூரி செயல்பட்டு வந்தது. அங்கு 2018 ஆக. 15,16 ல் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி கல்லூரி கட்டடங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. அங்கு மீண்டும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாக புவியியல் வல்லுனர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்தால் கல்லூரி தற்காலிகமாக பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு எவ்வித வசதிகளும் இன்றி கல்லூரி செயல்பட்டதால் மாணவர் சேர்க்கை குறைய துவங்கியது.அதன்பிறகு ஆயுத படை போலீஸ் முகாமிற்கு அருகில் உள்ள மாவட்ட சுற்றுலா துறைக்குச் சொந்தமான பட்ஜெட் ஓட்டல் கட்டடத்தில் எவ்வித அடிப்படை வசதிகள் இன்றி, இட நெருக்கடியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கல்லூரி செயல்பட்டு வருகிறது.மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகள் பயன் பெறும் வகையில் கல்லூரி கட்டப்பட்டது. ஆரம்பத்தில் 600க்கும் மேற்பட்டோர் பயின்று வந்த கல்லூரியில் நிரந்தர கட்டடம் இன்றி மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. கடந்தாண்டு 300 பேர் படித்தனர்.அலட்சியம்: தற்போது கல்லூரி செயல்படும் பட்ஜெட் ஓட்டல் அருகே கல்லூரி கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு மண் பரிசோதனை உள்பட பல பணிகள் நடந்தன. அடுத்த கட்ட நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டு அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதால் ஐந்து ஆண்டுகள் ஆகியும் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்ட இயலவில்லை. அதனால் எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள் பிள்ளைகளின் கல்வி கேள்வி குறியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை