| ADDED : ஜூன் 21, 2024 04:54 AM
கம்பம்: நகராட்சிகளில் தெருவோர வியாபாரிகள் விற்பனைக் குழுவிற்கு ஆறு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளின் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு நகராட்சிகளிலும் கணக்கெடுப்பு நடத்தி எத்தனை வியாபாரிகள் உள்ளனர் என்பதை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு மின்னணு அடையாள அட்டை, விற்பனை குழு சான்று வழங்கப்பட்டுள்ளது. தெருவோர வியாபாரிகள் கணக்கெடுப்பு முடிந்து விட்டதால் , நகர விற்பனைக் குழு அமைக்க நகராட்சிகளின் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.அமைக்கப்பட உள்ள விற்பனைக்குழுவில் தலைவருடன் சேர்ந்து 15 உறுப்பினர்கள் இருப்பார்கள். இதில் கமிஷனர், டாக்டர் இருவர், போலீசார் இருவர், நகராட்சி அலுவலர் ஒருவர், தெருவோர வியாபார பிரதிநிதிகள் 6 பேர், வணிகர் சங்க பிரதிநிதி ஒருவர், அரசு சாரா சமுதாய அமைப்பின் பிரதிநிதிகள் இருவர் அடங்குவர். இக் குழுவிற்கு நகராட்சி கமிஷனர் தலைவராக இருப்பார்.இந்த 15 உறுப்பினரிகளில் தெருவோர வியாபாரிகளை தவிர்த்து, 9 உறுப்பினர்களை சம்பந்தப்பட்ட நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் நியமனம் செய்வார். மீதமுள்ள 6 உறுப்பினர்களுக்கு மட்டும், கணக்கெடுப்பில் உள்ள தெருவோர வியாபாரிகளுக்கு இடையே தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்படுவர். இதில் ஆதி திராவிடர், இதர பிற்படுத்தப்பட்டோர், மகளிர் , மாற்றுத்திறனாளி, சிறுபான்மையினர், பொது என ஒதுக்கீட்டு அடிப்படையில் ஆறு உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். இதற்கான தேர்தல் ஜூலை 9 ல் வேட்பு மனு, ஜூலை 17 ல் திரும்ப பெறுதல், ஜூலை 17, ஜூலை 31ல் தேர்தல், ஒட்டு எண்ணிக்கை அன்று மாலை நடைபெறும்.கம்பம் நகராட்சியில் 785 சாலையோர வியாபாரிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் நகராட்சி அலுவலங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.