| ADDED : ஜூலை 01, 2024 05:58 AM
பெரியகுளம், : பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளர்கள் சம்பள உயர்வு கோரி இரண்டரை நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலை நிறுத்தம் 'வாபஸ்' பெறப்பட்டது.இம்மருத்துவமனையில் தனியார் நிறுவனம் மூலம் 70 ஒப்பந்தப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் துப்புரவு பணி, பாதுகாப்பு, சமையல் உதவியாளர், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து செல்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூன் 28ல், 'சம்பளம் உயர்வு நிலுவைத் தொகை வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பணி செய்வதற்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்' என்பன உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள், மருத்துவமனை வளாகத்தில் நேற்று மதியம் 12:00 மணி வரை இரண்டரை நாட்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் மருத்துவமனையில் துாய்மைப்பணி உட்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. நேற்று சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன சென்னை மண்டல பொறுப்பாளர் சீனிவாசலு, ஒப்பந்தப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதில் மாதச் சம்பளம் ரூ.8.500ல் இருந்து ரூ.11.500 ஆகவும், ஓய்வறை கூடுதலாக ஒதுக்கியும், பணி நேரம் வரைமுறை படுத்தப்படும் உள்ளிட்ட கோரிக்கைகள் செய்து தருவதாக தெரிவித்தார். இதனால் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்று, பணிக்கு திரும்பினர்.-