சின்னமனூர் : -சின்னமனுார் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் படுக்கைகள் மற்றும் டாக்டர்களை நியமிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னமனூர் அரசு மருத்துவமனையில் 54 படுக்கைகள், ஒரு ஆப்பரேசன் தியேட்டர் உள்ளது. டாக்டர்கள் ஒன்றிரண்டு பேர்கள் மட்டுமே உள்ளனர். குறிப்பாக பிரசவம் பார்க்க பெண் டாக்டர்கள் இல்லை. பணியில் இருந்த பெண் டாக்டர்களில் ஒருவர் சமீபத்தில் இறந்ததால் பெண்கள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.போதிய டாக்டர்கள் இல்லாததால் பிரசவம் மாதம் ஒற்றை இலக்கத்தில் கூட நடப்பதில்லை. அறுவை சிகிச்சைகளுக்கு டாக்டர்களை வெளியில் இருந்து அழைத்து கொள்கின்றனர். இம்மருத்துவமனையை நம்பி சின்னமனூர, ஒடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், தென்பழநி, காமாட்சிபுரம், சுக்காங்கல்பட்டி, கன்னிசேர்வை பட்டி, அப்பிபட்டி, முத்துலாபுரம், சீப்பாலக்கோட்டை, முத்துலாபுரம், எரசை, வேப்பம்பட்டி, சீலையம்பட்டி, மார்க்கையன்கோட்டை, குச்சனூர், அய்யம்பட்டி, புலி குத்தி, சிந்தலச்சேரி என கிராமங்களின் பட்டியல் நீள்கிறது.இது தவிர ஹைவேவிஸ் மலையில் உள்ள மகாராசா மெட்டு, இரவங்கலாறு, மணலாறு, வெண்ணியாறு பகுதிகளில் வசிப்பவர்களும் இங்கு தான் வர வேண்டும். இங்கு லேப் வசதிகள் இல்லை. டெக்னீசியன் இல்லை. மருந்தகம் உண்டு. பார்மசிஸ்ட் இல்லை. படுக்கை வசதி மிக குறைவு என இல்லை என்ற பட்டியல் நீள்கிறது. சின்னமனூர் மருத்துவமனையை மேம்படுத்த தேவையான டாக்டர்கள், வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.