உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் குமுளி எல்லையில் முற்றுகை போராட்டம்

கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் குமுளி எல்லையில் முற்றுகை போராட்டம்

கூடலுார் : முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் பொய் பிரசாரம் மேற்கொண்டு வரும் அரசியல்வாதிகளை கண்டித்து எல்லைப் பகுதியான குமுளி லோயர்கேம்பில் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது.கடந்த மூன்று நாட்களாக வயநாடு நிலச்சரிவை காரணம் காட்டி முல்லைப் பெரியாறு அணை உடையப் போகிறது எனவும், மாற்றாக புதிய அணை உடனே கட்டக் கோரியும் கேரளாவில் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உட்பட அரசியல்வாதிகள் பலர் பொய் பிரசாரம் செய்கின்றனர்.இது கேரள சமூக வலைதளங்களில் பரவி மீண்டும் இரு மாநில பிரச்னையை துாண்டும் வகையில் அமைந்துள்ளது. அணை பலமாக உள்ளது என பல்வேறு நிபுணர் குழுக்களின் ஆய்வுக்குப் பின் அறிவித்த போதிலும் கேரளா தொடர்ந்து பல்வேறு பொய் பிரசாரங்களை செய்து வருகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில், குமுளி எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். உத்தமபாளையம் டி.எஸ்.பி., செங்கோட்டு வேலவன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு விவசாயிகளை லோயர்கேம்பில் தடுத்து நிறுத்தினர். அங்கு கேரள அரசு, அரசியல்வாதிகளை கண்டித்து விவசாய சங்க பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின் அனைவரும் கலைந்து சென்றனர். விவசாய சங்க தலைவர் பொன்காட்சிக் கண்ணன், செயல் தலைவர் சலேத்து, மாவட்ட துணைத்தலைவர் ராஜிவ் கலந்து கொண்டனர். போராட்ட எதிரொலியாக நேற்று முன்தினம் இரவு முதலே எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழக அரசு தலையிட வேண்டும்

அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்:தென்மேற்கு பருவமழை துவங்கியவுடன் பெரியாறு அணை உடையப் போகிறது என்ற பொய் பிரசாரத்தை தொடர்ந்து கேரளா பல ஆண்டுகளாக செய்து வருவது வழக்கமாக உள்ளது. வயநாடு பிரச்னையை மறப்பதற்காக முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை கேரள அரசியல்வாதிகள் கையில் எடுத்துள்ளனர். பெரியாறு அணையில் இரு மாநில அரசுக்கும் 999 ஆண்டு குத்தகை அல்ல, அது செட்டில்மெண்ட். இதை யாராலும் மாற்ற முடியாது. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி செய்யும் வகையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட பல தரப்பில் இருந்தும் நிவாரணம் வசூல் செய்து கேரளாவுக்கு அனுப்பிய வண்ணம் உள்ளனர். தமிழக அரசும் ரூ. 5 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது. ஆனால் இரு மாநில உறவை சீர்குலைப்பதற்காக கேரள அரசியல்வாதிகள் அணை பிரச்னையை கையில் எடுத்துள்ளனர். கேரளாவில் அணைக்கு எதிராக பொய் பிரசாரத்தில் ஈடுபடுபவர்களை கேரள அரசு கட்டுப்படுத்த வேண்டும். இவ்விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் 2011ல் நடந்ததுபோல் மீண்டும் எல்லையில் பெரும் போராட்டம் வெடிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை