| ADDED : ஆக 09, 2024 12:33 AM
ஆண்டிபட்டி: மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தில் தமிழகம் அதிக பலன் பெற்றது என பா.ஜ.,பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள் பொது கூட்டத்தில் பேசினார்.ஆண்டிபட்டியில் பா.ஜ.,சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் நடந்தது. தேனி மாவட்ட பார்வையாளர் பார்த்தசாரதி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ராஜபாண்டி, மாவட்ட பொதுச் செயலாளர் பாலு மாநில செயற்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி முன்னிலை வகித்தனர். பெருங்கோட்டப்பொறுப்பாளர் கதலி நரசிங்கப்பெருமாள் பேசியதாவது:பா.ஜ., மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் இல்லை என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமரின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இது சிறு பிள்ளைத்தனமானது. தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என எதை வைத்து கூறுகிறார். திண்டிவனம் - திருவண்ணாமலை உட்பட ஐந்து புதிய ரயில்வே திட்டங்கள் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் 2024-20-25ம் ஆண்டில் மாநிலங்களுக்கு 23.49 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் தமிழகத்திற்கும் கிடைக்கும். ரேஷனில் ஒரு கிலோ அரிசிக்கு ரூ.29 மானியமாக மத்திய அரசு தருகிறது. முத்ரா கடன் திட்டத்தில் தமிழகம் தான் அதிக பலன் பெற்று உள்ளது என்றார்.