| ADDED : ஜூன் 23, 2024 04:43 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் துாய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அலுவலர்கள், கவுன்சிலர்கள் சமாதானத்திற்கு பின் பணிக்கு திரும்பினர்.டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் போதுராஜா 43, ஆண்டிபட்டி பேரூராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை செய்தார். சுகாதார பணி மேற்கொள்வது தொடர்பாக பேரூராட்சி தலைவர் சந்திரகலா, சுகாதார ஆய்வாளர் சூரியகுமார், மேஸ்திரி சரவணகுமாரி ஆகியோருடன் பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து போதுராஜா தேனியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். நீதிமன்ற உத்தரவில் ஆண்டிபட்டி போலீசார் சந்திரகலா, சூரியகுமார், சரவணகுமாரி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பேரூராட்சி நிர்வாகத்தினர் போதுராஜாவை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்த பணியில் இருந்து நீக்கினர். இது குறித்து போதுராஜா மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்த புகாரை தொடர்ந்து உதவி இயக்குனர் மணிமாறன் போதுராஜாவுக்கு மீண்டும் பணி வழங்க அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து நேற்று காலை 6:00 மணிக்கு பேரூராட்சி அலுவலகத்திற்கு பணிக்கு சென்றார். அங்கு குழுவில் இருந்த மற்ற பணியாளர்கள் போதுராஜாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பணி புறக்கணிப்பு செய்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். ஒப்பந்த பணியாளர்கள் கூறியதாவது: ஆண்டிபட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான அப்துல் கலாம் குழுவில் 35 ஆண்களும், அன்னை தெரசா குழுவில் 30 பெண்களும் உறுப்பினர்களாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணி மேற்கொள்கிறோம். குழுதலைவராக இருந்த போதுராஜா குழு பணத்தை தவறாக பயன்படுத்தியதால் அவரை குழுவில் இருந்து நீக்கினோம். தற்போது மீண்டும் குழுவில் சேர்த்து பணி தொடர அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணி புறக்கணித்துள்ளோம் என்றனர். பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் ஒப்பந்த பணியாளர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் பணிக்கு திரும்பினர். இது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பேரூராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.