| ADDED : ஜூன் 13, 2024 06:40 AM
தேனி: தேனி மாவட்ட நகர் ஊரமைப்புத் துறை உதவி இயக்குனர் ஓய்வு பெற்றதால் புதிய உதவி இயக்குனர் நியமிக்காததால் புதிய கட்டடங்களுக்கும், புதிய மனைப் பிரிவுகளுக்கு அனுமதி பெறுவதால் தாமதம் ஏற்படுவதாக மக்கள் புலம்புகின்றனர்.இத்துறை அலுவலகம் 2020 முதல் தேனி பெரியகுளம் ரோடு கான்வென்ட் பள்ளி எதிரே உள்ளது. இங்கு உதவி இயக்குனருக்கு கீழ் 2 மேற்பார்வையாளர்கள், 2 வரைவாளர்கள், 3 நில அளவையர்கள், உதவியாளர்கள் என, 12 பேர் பணியில்உள்ளனர். இங்கு உதவி இயக்குனராக இருந்த காவியம் மே 31ல் ஓய்வு பெற்றார்.அதன் பின் உதவி இயக்குனர் நியமிக்கப்படாததால் தினசரி கோப்புகளில் கையெழுத்திடுவது,புதிய மனைப்பிரிவில் 7,9, 10 மீட்டர் ஒதுக்கப்பட்டுள்ள தார் ரோடு அமைக்கப்படும் இடங்களை மேற்பார்வையில் அளக்கும் பணிகள், ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பணிகள் காலதாமதம் ஆகின்றன. இதனால் கல்வி நிறுவனங்கள் சிரமங்களை சந்திப்பதாக புலம்புகின்றனர்.மேலும் நிலம், கட்டட உரிமையாளர்கள் அனுமதி பெற காலதாமதம் ஆவதாக குற்றம் சாட்டுகின்றனர்.விரைவில் நகர் ஊரமைத்துறை உதவி இயக்குனர் பதவியை நிரப்பிட மாவட்ட நிர்வாகம் நடடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.