உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சேதமான தொட்டியை அகற்றி புதிய மேல்நிலை தொட்டி அமைக்க வலியுறுத்தல் சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிக்கு மக்கள் தவிப்பு

சேதமான தொட்டியை அகற்றி புதிய மேல்நிலை தொட்டி அமைக்க வலியுறுத்தல் சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிக்கு மக்கள் தவிப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம், சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இவ்வூராட்சிக்கு உட்பட்ட கரிசல்பட்டி, மலையாண்டிநாயக்கன்பட்டி கிராமங்கள் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கும் கரிசல்பட்டியில் 10ஆயிரம் லிட்டர் கொள்ள உள்ள இரு மேல்நிலைத்தொட்டிகளும் சேதமடைந்துள்ளன. ஆண்கள், பெண்கள் பொதுக்கழிப்பறை வசதி இல்லை. கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் போதுமான அளவு வினியோகம் இல்லை. போர்வெல் மூலம் கிடைக்கும் நிலத்தடி நீரை அனைத்து தேவைக்கும் பயன்படுத்துகின்றனர். நீர் வரத்து கால்வாயில் குப்பை அகற்றப்படாமல் குவிந்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இப்பகுதி மக்கள் கூறியதாவது:

பராமரிப்பு இல்லாத சமுதாய கூடம்

எத்திலாவுலு, கரிசல்பட்டி: சேதமடைந்த இரு குடிநீர் தொட்டிகள் ஆபத்தான நிலையில் உள்ளன. அதனை சீரமைக்கும் நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சமுதாயக்கூடத்திற்கு தண்ணீர், மின்சார வசதி செய்திட கோரி பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. பொதுக்கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். ரயில்வே சுரங்க பாலத்தின் உயரம் குறைவாக இருப்பதால் சரக்கு லாரிகள் இதனைக் கடந்து கிராமத்திற்கு வருவதில் சிரமம் உள்ளது. கட்டுமான பணியின் போது இது குறித்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டதால் இன்று சிரமப்படுகிறோம்.

சகதியால் அவதி

ராஜா, கரிசல்பட்டி: முத்தாலம்மன் கோயிலை ஒட்டிச் செல்லும் ரோடு மோசமாக உள்ளது. சிறு மழை பெய்தாலும் சகதியால் நடந்து செல்பவர்களுக்கும் வாகனங்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. இப்பகுதியில் உள்ள மண்டபத்தில் விசேஷ காலங்களில் ஒரே நாள், ஒரே நேரத்தில் 3 முதல் 5 நிகழ்ச்சிகள் கூட நடைபெறும். மக்கள் பலர் கூடும் இடத்தில் மழை நீர் தேங்கி பாதிக்கிறது. வடக்கு, தெற்கு தெருக்களுக்கு இணைப்பாக மண் ரோட்டை, தார் ரோடு அல்லது பேவர் பிளாக் பதித்து மழைநீர் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ரங்கசமுத்திரம் கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து ஓடையில் குப்பை அதிகம் சேருகிறது. இதனை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரை பணயம் வைக்கும் ஊழியர்கள்

முத்துராம், மலையாண்டிநாயக்கன்பட்டி: கடந்த 35 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனை சீரமைக்கவில்லை. புதிய குடிநீர் தொட்டி கட்டவும் நடவடிக்கை இல்லை. குடிநீர் பணியாளர்கள் உயிரை பணயம் வைத்து மேல்நிலைத் தொட்டியில் சுத்தம் செய்கின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுக்கிணறுக்கு பாதுகாப்பு மேல் மூடி இல்லை. தற்போது ஜல்ஜீவன் திட்டத்தில் கிராமத்தில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. மேல்நிலைத் தொட்டி கட்ட பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் அதற்கான பணிகள் துவங்கவில்லை.

நிதி வசதியின்றி நிர்வாகம் தவிப்பு

ரத்தினம், ஊராட்சி தலைவர்: ஊராட்சியில் வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 6 கிராமங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை. முத்துச்சங்கிலிபட்டியில் குடியிருப்பு அருகே, சண்முகசுந்தரபுரத்தில் நாடக மேடை அருகே மழை நீர் தேங்குவதால் பாதிப்பு ஏற்படுகிறது இப்பகுதியில் பேவர் பிளாக் பதிக்க பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அதற்கான நிதியை பெற முடியவில்லை. அரசு உயர்நிலைப்பள்ளி அருகே வடிகால் வசதியின்றி மழை நீரால் பாதிப்பு ஏற்படுகிறது. மலையாண்டி நாயக்கன்பட்டியில் ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய மேல்நிலைத்தொட்டி கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு இல்லை. ஜல் ஜீவன் திட்டத்திலும் இக்கிராமத்தில் மேல்நிலைத்தொட்டி கட்டவும் அனுமதிக்கவில்லை. பழுதான தொட்டியை அகற்றினால் குடிநீர் வினியோகம் செய்வதில் சிரமம் ஏற்படும். மாற்றுவழி இல்லை. 15வது நிதிக்குழு மானியத்தில் ஒதுக்கப்படும் குறைவான நிதியில் 50 சதவீதம் குடிநீர் குழாய் பராமரிப்பு, சுகாதாரம் ஆகியவற்றிற்கு செலவிட வலியுறுத்துகின்றனர். மீதி தொகையில் அடிப்படை வசதிக்கான எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியவில்லை. ஊராட்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்து மாவட்ட மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கிடைக்கும் அரசின் நிதிக்கு தக்கபடி ஊராட்சியில் பணிகள் நடந்து வருகிறது.இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ