| ADDED : மார் 28, 2024 06:48 AM
தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அ.ம.மு.க., வேட்டாளர் தினகரன், கட்சி நிர்வாகி ராம்பிரசாத் மற்றும் பலர் மீது வீடியோ பதிவு ஆதாரங்களின் படி தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தேனி தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் மதியம் 2:00 முதல் 3:00 மணிக்குள் மனுத்தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டது. இதற்காக தேனி அன்னஞ்சி விலக்கில் இருந்து அ.ம.மு.க., பா.ஜ., அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மற்றும் கூட்டணி கட்சியினர் 60 வாகனங்களில் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். மதுரை ரோடு எஸ்.பி., அலுவலகம் அருகே தடை செய்யப்பட்ட பகுதி என 100 மீ., இடைவெளியில் பேரிகார்டு அமைத்து தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது.தினகரன் பிரசார வாகனம் தடுப்பை கடந்து வந்த போது போலீசார் தடுத்து பிரசார வாகனத்தை உள்ளே நுழைய அனுமதி மறுத்தனர்.இதை மீறி உள்ளே சென்ற தினகரனின் பிரசார வாகனத்தை அங்கு பாதுகாப்பில் இருந்து தேனி இஸ்பெக்டர் உதயகுமார் தடுத்தார்.இன்ஸ்பெக்டர் கையால் தடுக்க தடுக்க அவரை 20 மீட்டர் துாரம் வேன் தள்ளி சென்றது.இதையடுத்து வீடியோ கண்காணிப்புக்குழு தலைவர் நீதிநாதன் புகாரில் தினகரன், கட்சி நிர்வாகி ராம்பிரசாத் மற்றும் பலர் மீது கூடுதல் வாகனங்களுடன் வந்தது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.