வீரபாண்டி சித்திரை திருவிழா ராட்டினம் ஏலம் ஒத்திவைப்பு; முடிகாணிக்கை, கடைகள் ஏலம் போனது
தேனி, : வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் ராட்டினம் அமைக்க ரூ.2.93 கோடிக்கு ஏலம் கேட்க முன்வராததால் ஒத்தி வைக்கப்பட்டது. முடிகாணிக்கை, உணவுக்கூடங்கள் அமைத்தல் ஏலங்கள் முடிவு செய்யப்பட்டன.வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழா மிக பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். தென்மாவட்டங்கள், கேரளாவில் இருந்தும் அதிக பக்தர்கள் வருவார்கள். இந்தாண்டு சித்திரை திருவிழாவிற்காக கொடிமரம் நடும் நிகழ்ச்சி ஏப்., 15ல் நடக்கிறது. திருவிழா மே 6 முதல் மே 13 வரை 8 நாட்கள் நடக்கிறது. விழாவில் முடிக்காணிக்கை செலுத்துதல், உணவுக்கூடங்கள் அமைத்தல்,கண்மலர் விற்பனை செய்தல், ராட்டினங்கள் அமைக்க நேற்று கோயில் அலுவலகத்தில் ஏலம் நடந்தது. ஹிந்து அறநிலைத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் கார்த்திக் தலைமை வகித்தார். கோயில் செயல் அலுவலர் நாராயணி, ஆய்வாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். ஏலத்தை மேலாளர் பாலசுப்பிரமணியம், கணக்காளர் பழனியப்பன் ஒருங்கிணைத்தனர்.ஏலத்தில் கண்மலர் விற்பனை செய்தல் ரூ. 5.10லட்சம், உணவுக்கூடங்கள் அமைத்தல் ரூ. 33.14லட்சம், முடிக்காணிக்கை வசூலிக்க ரூ.12.50லட்சத்திற்கும் ஏலம் போனது. கடந்தாண்டு கண்மலர் விற்பனை ரூ.4.62லட்சம், உணவுக்கூடங்கள் ரூ.28.79 லட்சம், முடிக்காணிக்கை வசூல் ரூ.10.61 லட்சத்திற்கு ஏலம் போனது.ராட்டினம் அமைப்பதற்கான ஏலம் ரூ. 2கோடியே 93லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஏலத்தில் பங்கேற்றவர்கள் ஏலம் கேட்கவில்லை. ராட்டினம் அமைப்பதற்கான ஏலம் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. கடந்தாண்டு ராட்டினம் அமைக்க ரூ. 2 கோடியே 55 லட்சத்திற்கு ஏலம் போனது குறிப்பிடதக்கது. ஒவ்வொரு ராட்டினத்திற்கும் நபர் ஒருவருக்கு தலா ரூ.150 வசூலிக்கப்பட்டது.