உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு 105 கன அடியாக குறைப்பு லோயர்கேம்பில் மின் உற்பத்தி நிறுத்தம்

முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு 105 கன அடியாக குறைப்பு லோயர்கேம்பில் மின் உற்பத்தி நிறுத்தம்

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு நீர் திறப்பு 105 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.முல்லைப் பெரியாறு அணையில் இருந்து சில நாட்களாக தமிழகப்பகுதிக்கு நீர் திறப்பு வினாடிக்கு 1511 கன அடியாக இருந்தது. இதனால் நீர்மட்டம் வெகுவாக குறையும் நிலை இருந்ததால் நீர் திறப்பை குறைக்க விவசாயிகள் வலியுறுத்தினர். ஆக.19ல் நீர் திறப்பு 300 கன அடியாக குறைக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் 300 கன அடி நீர் முதல்போக நெல் சாகுபடிக்கும் குடிநீருக்கும் போதுமானதாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் நேற்று காலை 6:00 மணிக்கு திடீரென நீர் திறப்பு 105 கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 221 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 4395 மில்லியன் கன அடியாகும். பெரியாறில் மட்டும் 4.4.மி.மீ., மழை பதிவானது. அணையின் நீர்மட்டம் 128.60 அடியாக இருந்தது(மொத்த உயரம் 152 அடி).

மின் உற்பத்தி நிறுத்தம்

லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நடக்க குறைந்தது 300 கன அடி நீர் தேவைப்படும். நீர் திறப்பு 105 கன அடியாக குறைக்கப்பட்டதால் மின் உற்பத்தி முழுவதும் நிறுத்தப்பட்டது. தற்போது திறக்கப்பட்டுள்ள நீர் குமுளி மலைப்பாதையில் உள்ள இரைச்சல் பாலம் வழியாக வெளியேறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி