| ADDED : மே 16, 2024 06:12 AM
கம்பம் : கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார் வட்டாரங்களுக்கு ஆர்.என்.ஆர். விதை நெல் ரகம் கூடுதலாக அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதனால் விதைநெல் விற்பனையில் தனியார் நிறுவனங்கள் சரிவை சந்தித்து உள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை வேளாண் துறையிடம் மட்டுமே விதை நெல் வாங்கி வந்தனர். அதன் பின் தனியார் கடைகளில் வாங்க துவங்கினர். கடந்த சில ஆண்டுகளாக வீரிய ஒட்டு ரகங்களை வாங்குவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் விதை நெல் விற்பனையில் வேளாண் துறை 10 சதவீதம் என்ற நிலையில் இருந்தது.இந்நிலையில் கடந்தாண்டு 2 போகங்களிலும் வேளாண் துறை கொடுத்த ஆர்.என்.ஆர். ரகம் நல்ல மகசூலை தந்தது. இதனால் தற்போது முதல் போக சாகுபடிக்கு ஆர்.என்.ஆர் ரகம் கேட்டு வேளாண் துறை அலுவலகங்களில் விவசாயிகள் வரிசையில் நிற்கின்றனர். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு 100 கிலோ வரை இருந்த இருப்பு 10 டன் வரை காலி செய்தனர்.ஆனால் கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார் வேளாண் அலுவலகங்களில் விதை நெல் கேட்டு விவசாயிகள் குவிந்துள்ளனர். தற்போது ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தலா 10 டன் வரை விதை கிராம திட்டத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு ஆதார் எண்ணுக்கு 20 கிலோ மட்டுமே அனுமதி என்பதால் வேளாண் துறையினர் கைகளை பிசைந்து கொண்டு நிற்கின்றனர். தனியார் வியாபாரிகளின் விதை நெல் விற்பனையை இந்த ஆர்.என்.ஆர். ரகம் முடக்கி விட்டது.