| ADDED : நவ 19, 2025 06:21 AM
கூடலுார்: கேரளாவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தி வந்த பெண் உட்பட 2 பேரை பீர்மேடு கலால் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இடுக்கி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான வாகமண் அருகே கோலாகலமேடு ரோட்டில் கலால்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கேரள பதிவெண் கொண்ட வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது கேரளாவில் தடை செய்யப்பட்டுள்ள உயிர்க்கொல்லி போதைப் பொருளான எம்.டி.எம்.ஏ.,50 கிராம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கைப்பற்றிய அதிகாரிகள் ரூ.3.75 லட்சம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர். காரில் வந்த கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது பவாஸ் 32, சிரவன்தாரா 27, ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் வாகமண் பகுதியில் அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையில் 2.5 கிராம் எம்.டி.எம்.ஏ., போதைப்பொருளும், 3 கிராம் ஹாசிஸ் ஆயிலும் இருந்தததை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சிரவன்தாரா நவம்பர் 11ல் ஆலப்புழா அருகே 430 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட ஸ்ரீமான் என்பவரின் மனைவி என தெரியவந்தது.