தேனி: விவசாயம் சார்ந்த தேனி மாவட்டத்தில் உரங்கள் இருப்பு, விற்பனையை கண்காணிப்பது, விவசாயிகளுக்கு அனைத்து காலங்களிலும் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகள் வேளாண் தரக்கட்டுப்பாட்டு பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேளாண் துறையில் அப் பிரிவின் செயல்பாடுகள் பற்றி தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் திலகர், அன்புடன் அதிகாரி பகுதிக்காக கூறியதாவது: தரக்கட்டுப்பாட்டு பணி பற்றி கூறுங்கள் மாவட்டத்தில் தனியார், கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரங்கள் மொத்தம், சில்லரை விற்பனை செய்ய உரிமம் வழங்குவது. மாவட்டத்தில் உரங்கள் மொத்த இருப்பை கண்காணிப்பது, விற்பனை மையங்களில் விதிகள் பின்பற்றுவதை உறுதி செய்வது, விதி மீறும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது. விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் உரங்கள் தரத்தினை உறுதி செய்வது. விவசாயிகளுக்கு உரிய விலையில் உரம் கிடைப்பதை உறுதி செய்வது வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநரின் முக்கிய பணிகள் ஆகும். எத்தனை இடங்களில் உரங்கள் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தனியார் கடைகள் மூலம் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனையாளர்கள் 38 தனியார், டான்பெட் என 39 பேர் உள்ளனர். இவர்களிடமிருந்து உரங்கள் வாங்கி 175 தனியார், 74 கூட்டுறவு சங்கங்கள் உரங்களை விற்பனை செய்கின்றன. உர விற்பனை செய்வோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உர விற்பனை நிலையங்களில் பி.ஓ.எஸ்., மிஷன் கட்டாயம் இருக்க வேண்டும். இருப்பு பதிவேடு, உரம் வாங்கி, விற்பனை செய்ததற்கான ரசீது, பதிவேடு, உர விற்பனை விலை, இருப்பு தொடர்பாக விவசாயிகளுக்கு தெரியும் வகையில் பலகை வைத்திருக்க வேண்டும். உரங்களின் தர ஆய்வு கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் உரங்களின் மாதிரிகள் எடுத்து ஆய்விற்கு அனுப்புகிறோம். கடந்த ஓராண்டில் 560 உர மாதிரிகள் எடுத்து அனுப்பி உள்ளோம். உர மாதிரிகள் எடுக்கும் பணி வட்டார அளவிலான உர ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதில் இரு உர மாதிரிகள் தரம் குறைந்து காணப்பட்டது. அந்த இரு உர மாதிரிகள் எடுக்கப்பட்ட கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளோம். உரங்கள் வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் சம்மந்தப்பட்ட விவசாயி ஆதார் எண் வழங்கினால் மட்டும் உரம் வழங்க வேண்டும். தேவைக்கு அதிகமாக உரங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். கூடுதலாக உரங்கள் வாங்கும் விவசாயிகள் கண்காணிக்கப்படுகிறார்கள். உரம் வாங்கும் பொது எம்.ஆர்.பி., விலைக்கு வாங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் ஓராண்டிற்கு எவ்வளவு உரம் தேவைப்படுகிறது தோராயமாக மாவட்டத்தில் பயன்பாட்டிற்கு யூரியா 14 ஆயிரம் டன், டி.ஏ.பி., 4ஆயிரம் டன், பொட்டாஷ் 5 ஆயிரம் டன், காம்ப்ளக்ஸ் 23ஆயிரம் டன், சூப்பர் பாஸ்பேட் 600 டன் தேவைப்படுகிறது. உரக் கடைகளில் ஆய்வு நடக்கிறதா உள் மாவட்ட குழு, வெளி மாவட்ட குழுக்கள் மூலம் மாவட்டத்தில் உரங்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வுகள் செய்யப்படுகிறது. உரிமம் இன்றி உர விற்பனை செய்வது குற்றமாகும். விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறியவர்கள் மீது நடவடிக்கை உண்டா மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் இருப்பு பதிவேட்டில் உள்ள தகவலுக்கும், இருப்பிற்கு வித்தியாசம் இருந்த கடைகள், அனுமதி பெற்ற உரங்களை தவிர பிற உரங்கள் விற்பனை செய்த கடைகள் என மொத்தம் 24 கடைகளில் உரங்கள் விற்பனை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டது. அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டது. பின் 21 நாட்களுக்கு பின் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. உரம் பற்றாக்குறை என புகார் உள்ளதே விவசாயிகள் சில கடைகளில் தொடர்ச்சியாக உரங்கள் வாங்குகின்றனர். அவர்கள் கேட்கும் போது கடைகளில் சில உரங்கள் கிடைப்பதில்லை. ஆனால், அருகில் உள்ள கடைகளில் இருக்கும். குறிப்பிட்ட கடையில் உரம் இல்லை என்பதை உரப்பற்றாக்குறை என சில மாதங்களுக்கு முன் விவசாயி புகார் அளித்தார். விசாரித்த போது விவசாயி குறிப்பிட்ட கடையில் உரம் இல்லாததை அவ்வாறு கூறியது தெரிந்தது. குறிப்பிட்ட நிறுவன உரம் கடையில் வைத்திருப்பது விற்பனையாளரின் சூழலை பொருத்தது. மாவட்டத்தில் உரப்பற்றாக்குறை இல்லை. போதிய உரம் கையிருப்பில் உள்ளது. தற்போதைய உரக்கையிருப்பு மாவட்டத்தில் தனியார், கூட்டுறவு சங்கங்களில் யூரியா 1177 டன், டி.ஏ.பி., 500 டன், பொட்டாஷ் 640 டன், காம்ளக்ஸ் 3253 டன், சூப்பர் பாஸ்பேட் 397 டன் கையிருப்பில் உள்ளன. அங்கக உர பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறதா செயற்கை உரங்களுக்கு பதிலாக அங்கக உரங்கள் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். தற்போது மாவட்டத்தில் நானோ யூரியா, அங்கக உரம் பயன்பாடு அதிகரித்து வருகிறது.செயற்கை உரங்கள் தயாரிக்கும் அதே நிறுவனங்கள் அங்கக உரங்கள் தயாரித்து விற்பனை செய்கின்றன. அதனை விவசாயிகள் பயன்படுத்த துவங்கி உள்ளனர். இது தவிர மாவட்டத்தில் 13 இடங்களில் உரிமம் பெற்று மண்புழு உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு திட்டத்தில் 50 ஏக்கர் சாகுபடி நிலங்கள், விவசாயிகளை ஒருங்கிணைத்து பாரம்பரிய விவசாய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இயற்கை இடு பொருட்கள் அசோஸ்பைரில்லம், பஞ்சகாவியா, மீன் அமிலம், நொச்சி, ஆடாதொடை உள்ளிட்ட இயற்கை பூச்சி விரட்டி மருந்துகள், வேப்பங்கொட்டை சாறு தயாரித்து பயன்படுத்துகின்றனர். வீரபாண்டி, லட்சுமிபுரம் பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. உரங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறதா விவசாயிகள் வாங்கும் உரங்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகிறது. யூரியா மூடை ரூ.1457.29. ஒரு மூடைக்கு ரூ. 1190.75 மானியமாக வழங்கப்பட்டு ரூ. 266.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் டி.ஏ.பி., ஒரு மூடைரூ.2739.95 க்கு ரூ. 1389.95 மானியம் வழங்கி ரூ. 1350க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொட்டாஷ் மூடைக்கு ரூ. 71.40 மானியமாக வழங்கப்பட்டு, ரூ. 1800க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற உரங்கள் அதில் உள்ள சத்துக்கள் அடிப்படையில் மானியங்கள் வழங்கப்பட்டு எம்.ஆர்.பி., விலையில் விற்கப்படுகிறது. ↓உரம் தொடர்பாக யாரிடம் புகார் அளிப்பது உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், உரங்கள் தரமின்றி இருப்பதாக தெரிந்தால் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் உதவி இயக்குநரிடமோ, அல்லது தேனி வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநரிடம் புகார் தெரிவிக்கலாம் என்றார்.